சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ஐந்து இடங்களில் அதிகளவில் விபத்துகள் தொடர்ந்து நடந்துவருவதாகவும், இதற்கு நான்கு வழிச்சாலை அந்த இடங்களில் இருவழிச் சாலையாக குறுகுவதுமே காரணம் எனவும், அதனால் அவற்றையும் நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மமக கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் பசல் முஹம்மது கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மனித உயிர்களை காவு வாங்கும் 5 பகுதியில் உள்ள இருவழிச்சாலை, நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும். சேலத்தில் இருந்து சென்னை செல்லும் மிக முக்கியச் சாலை சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் புறவழிச்சாலைப் போடப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையில், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய 5 இடங்களில் நகரை ஒட்டியுள்ள பகுதி மட்டும் இருவழிச்சாலையாக உள்ளது. மற்ற இடங்களில் நான்கு வழி சாலையாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் நான்கு வழிசாலையிலிருந்து, இருவழிச் சாலையாக குறுகும் இடத்திலும், இருவழிச்சாலையில் வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி செல்லும் போதும் பெரும் விபத்து ஏற்படுகிறது. கடந்த 10 வருடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். வாகன விபத்தை தவிர்க்க இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இன்னமும் சாலை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கண்டு கொள்ளாமல் இருப்பது நிதர்சனமான உண்மை.
இப்பகுதியில் இதுபோன்ற கோரவிபத்துகள் நடப்பது புதிதல்ல. விபத்து நடைபெறும் போது மட்டும் அனைவரும் பரபரப்பாக இருக்கின்றனர். அதிகாரிகள் வருகிறார்கள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். சிறிது நாட்கள் கழித்து விபத்து பற்றி மறந்து, அடுத்த பிரச்சனையில் கவனம் செலுத்துகின்றனர். இந்த தேசிய நெடுஞ்சாலை இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க காத்திருக்கிறதோ...? இன்றும் தியாகதுருகம் புறவழிச்சாலையில் நடந்த கோர விபத்து 6 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். ஆகவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து புறவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற உரிய ஆவணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.