சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிரேமலதா என்ற வாக்காளர், உதயநிதி ஸ்டாலினின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்பு மனுவில் தன் மீதான வழக்குகள் குறித்த விவரங்களை முறையாகக் குறிப்பிடவில்லை; அதனை தேர்தல் ஆணையம் முறையாகப் பரிசீலிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தரப்பில் நிராகரிப்பு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனது வேட்பு மனுவில் அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டிருந்ததால் தான் இந்திய தேர்தல் ஆணையம் தனது மனுவை ஏற்றுக் கொண்டிருந்தது. அவ்வாறு விவரங்கள் மறைத்திருந்தால், அந்த கட்டத்திலே தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருக்கும். எனவே, தனது வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் இன்று (28/04/2022) தீர்ப்பளித்தார். அதன்படி, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன்மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.