சா்வதேச சுற்றுலா ஸ்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் வெளிமாநிலம், வெளிநாடு மற்றும் உள்ளூர் மக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் அருகில் இருக்கும் கோவளத்தில் உள்ள தனியார் நிறுவனமான பேவாட்ச் நீர் விளையாட்டு பொழுதுபோக்கு பூங்காவுக்கு செல்கின்றனர்.
இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக மாயாபுரி என்ற மெழுகு சிலை அருங்காட்சியகம் கன்னியாகுமரி ரயில் நிலைய வளாகத்தில் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பிரபலங்களின் மெழுகு சிலைகள் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இதில் மகாத்மாகாந்தி, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் அமெரிக்கா அதிபா் ஒபாமா, அன்னை தெரசா, கேரளா முன்னாள் முதல்வா் உம்மன்சாண்டி, பாப்பாடகர் மைக்கேல் ஜாக்சன், ரவிந்திரநாத் தாகூர், கர்நாடக பாடகி எம்எஸ் சுப்புலெட்சுமி, உட்பட பிரபலங்களின் 17 மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சிலைகளை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனா். அங்கு கேரளாவை சோ்ந்த பிரபல சிலை வடிவமைப்பாளா் பேபி அலெக்ஸ் தத்ரூபமாக வடிவமைத்த நடிகா் விஜய்யின் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. இதனை குமரி நெல்லை விஜய் ரசிகா்கள் திறந்து வைத்தனா். இந்த சிலை விஜய் நேரில் நிற்பது போல் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டியிருப்பதால், அதனை ஏராளனமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.