கிருஷ்ணகிரி அருகே, வெடிகுண்டை வீசியெறிந்து வளர்ப்பு நாயை கொடூரமாக கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி அருகே உள்ள மண்ணூர்குட்டையைச் சேர்ந்தவர் பிரபு டேவிட். அதே பகுதியில் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில், நான்கு வயதான ஜெர்மன் ஷெப்பர்டு இன நாயை வளர்த்து வந்தார். கடந்த 6ம் தேதி இரவு அந்த நாய், பேட்டரி தயாரிப்பு அறைக்கு முன்பு நின்று கொண்டு நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து விட்டதால்தான் நாய் குரைக்கிறதோ என்று எண்ணி பிரபு டேவிட், டார்ச் லைட் அடித்து பார்த்தார். இந்நிலையில் நள்ளிரவு 1 மணியளவில், பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. சம்பவ இடம் சென்று பார்த்தபோது, அங்கே அவருடைய வளர்ப்பு நாய் உடல் சிதறி இறந்து கிடந்தது. இதைக்கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பிரபு டேவிட், கிருஷ்ணகிரி தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், தனக்கும், தனது தொழிற்சாலைக்கு அருகில் உள்ள சிலருக்கும் இடையே நீண்ட நாள்களாக நிலத்தகராறு இருந்து வருவதாகவும், அந்த முன்விரோதத்தில் அவர்கள் வெடி குண்டை வீசி வளர்ப்பு நாயை கொன்று இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு காவல்துறை மோப்ப நாய் சாம்பவியை அழைத்து வந்து துப்பு துலக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே, வளர்ப்பு நாய் வெடித்துச் சிதறி இறக்கும் காட்சிகள் கொண்ட சிசிடிவி பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், மர்ம நபர்கள் எலும்புடன் வெடிகுண்டை கட்டி நாய் முன்பு வீசியுள்ளனர். அந்த எலும்பை கவ்வியபோது, குண்டு வெடித்து உடல் சிதறி நாய் பரிதாபமாக பலியாகி இருப்பது தெரிய வந்தது.
பிரபு டேவிட் அளித்த புகாரின்பேரில், அவருடைய தொழிற்சாலைக்கு அருகில் வசிக்கும் முனிராஜ், லலித் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். முன்விரோதத்தில் அவர்கள்தான் நாயை வெடி வைத்துக் கொலை செய்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், சம்பவ இடத்தைச் சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.