ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சாலை போக்குவரத்து மருத்துவ கல்லூரி செயல்பட்டு வந்தது. இது அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர், கண்ட்ரக்டர், உட்பட இதன் பணியாளர்களின் குழந்தைகள் மருத்துவர்களாக படிக்க முன்னுரிமை உள்ள கல்லூரி. இது தொழிலாளர் நலன் கருதி எம்.ஜி.ஆர். ஆட்சியில் அப்போது போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த சு.முத்துச்சாமியால் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. ஆனால் இந்த வருடத்துடன் இது வழக்கமான அரசு கல்லூரியாக அறிவிக்கப்பட்டது. இந்த மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று திரண்டு வந்து ஈரோடு கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்கள்.
எங்களது மகன் - மகள்கள் 100 _க்கும் மேற்பட்டோர் தற்போது பெருந்துறை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார்கள். இந்த ஆண்டு முதல் பெருந்துறை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு உள்ளது. தற்போது கல்வி கட்டணமாக ஒரு லட்சத்து 85 ஆயிரம் வசூலிக்கிறார்கள். ஆனால் இதர அரசு மருத்துவக் கல்லூரிகளில் கல்வி கட்டணமாக ரூபாய் 13 ஆயிரத்து 500 மட்டுமே வசூலிக்கிறார்கள். பெருந்துறை மருத்துவ கல்லூரி கட்டணம் தனியார் மருத்துவக் கல்லூரியின் கட்டணத்திற்கு இணையாக உள்ளது. இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களாகவும் உள்ளனர். எங்களால் ஆண்டுக்கு இவ்வளவு பெரிய கட்டணம் கட்டுவது மிகவும் கடினமாக உள்ளது. எனவே இந்த கல்லூரியின் கட்டணத்தை ஏனைய அரசு மருத்துவக்கல்லூரி கட்டணத்தை போன்று நிர்ணயம் செய்ய வேண்டும் என்றனர்.
தொழிலாளர்களின் குடும்ப குழந்தைகளும் டாக்டராக வேண்டும் என்ற உயரிய நோக்கத்துக்காக அதற்கென ஒரு மருத்துவ கல்லுரி தொடங்கி அதில் முன்னுரிமை கொடுத்து படிக்க வைத்ததால்தான் இந்த முப்பது வருடத்தில் பல ஆயிரக்கணக்கான டாக்டர்களாக டிரைவர் மகன் அல்லது மகள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆட்சி அ.தி.மு.க.ஆட்சி. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம். எம்.ஜி.ஆர். என்ன நோக்கத்திற்காக ஒரு திட்டத்தை தொடங்கினாரோ அதை சீர்குழைத்தது போல் இந்த மருத்துவக் கல்லூரியை அரசு மருத்துவக் கல்லூரியாக பெயர் மாற்றி இங்கு படிப்பவர்களுக்கு அதாவது ஏழை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வது அநியாயம் என கதறுகிறார்கள் அரசு பேருந்து ஒட்டுனர்கள்.