தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை, காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவுப்படி, அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் மணி மனோகரன், காவல் உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
நேற்று(13.12.2023) பொன்மலை அருகே உள்ள பாழடைந்த பழைய குடியிருப்பில் யாரோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு சென்ற பார்த்தபோது, சுமார் 21 மூட்டைகளில் 50 கிலோ வீதம் 1050 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இந்த ரேஷன் அரிசியை பதுக்கி, மூட்டைகளை அடுக்கி கொண்டிருந்த திருச்சி இ.பி(EB) சாலையை சேர்ந்த கோதண்டபாணி மகன் ஆனந்த்(24) என்பவரையும், அவர் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், இவர் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அருகில் உள்ள கிராமங்களில் மாட்டு தீவனத்திற்கு விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.