கோவில் திருவிழாவில் சாமியாடி ஒருவர் உடன் ஆடிய மற்றொரு பெண் சாமியாடியின் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பணிக்கன் குடியிருப்பைச் சேர்ந்தவர் பால்தங்கம். 48 வயதான பால்தங்கத்திற்குச் சொந்தமான குடும்பக் கோவில் அதே பகுதியில் உள்ளது. குடும்பக் கோவிலான பிரம்ம சக்தி அம்மன் கோவிலில் கடந்த சில ஆண்டுகளாகக் கொடைவிழா நடைபெற்று வருகிறது.
கொடைவிழாவில் பால்தங்கம் சாமியாடி மக்களுக்கு அருள்வாக்கு சொல்லுவதாகவும் கூறப்படும் நிலையில் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவர் பிரம்ம சக்தி அம்மன் கோவில் கொடை விழாவில் சாமியாடியுள்ளார். இதற்கு கோவில் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பினை தெரிவிக்க இது வாக்குவாதமாக மாறியுள்ளது.
இந்நிலையில் நேற்று நடந்த கோவில் கொடை விழாவில் கோவிலுக்குச் சென்ற விஜயன் மீண்டும் சாமி ஆடியுள்ளார். கோவிலில் பலகாரம் சுடப்பட்டுக்கொண்டிருந்த இடத்திற்கு சாமி ஆடியபடி வந்த விஜயன் கொதிக்கும் எண்ணெய்யில் கை விட்டு பலகாரங்களை எடுத்து மக்களுக்குக் கொடுத்துள்ளார். அதே சமயத்தில் பால்தங்கத்தையும் எண்ணெய்யில் கைவிட்டு பலகாரத்தை எடுத்து கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு பால்தங்கம் மறுக்கவே ஆத்திரம் அடைந்த விஜயன் கொதிக்கும் எண்ணெய்யை பால்தங்கத்தின் மேல் ஊற்றியதாகக் கூறப்படுகிறது.
கொதிக்கும் எண்ணெய் பட்டதில் பால்தங்கத்தின் கைகள், முகம், கழுத்து என பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த மக்கள் பால்தங்கத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது தனியார் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் பால்தங்கம் சிகிச்சை பெற்று வருகிறார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுசீந்திரம் காவல்துறையினர் விஜயனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதே சமயத்தில் பால்தங்கத்தின் உறவினர்கள் விஜயன் முன்விரோதம் காரணமாகத்தான் இவ்வாறு செய்தார் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.