செஞ்சி உட்கோட்டம், அவலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொறையூர் கிராம பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேசன்(42). இவர், கடந்த 2008ம் ஆண்டு சென்னையில் ஒரு கொலை குற்ற வழக்கில் ஈடுபட்டு பூந்தமல்லி விரைவு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்துள்ளார். 18/5/2011 முதல் 22/5/2011 வரை 5 நாள் பரோலில் சிறையிலிருந்து வெளியே வந்தவர் பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு செல்லாமல் தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, சுமார் 11 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள வெங்கடேசனை கைது செய்ய செஞ்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரியதர்ஷினியின் தலைமையில், உதவி ஆய்வாளர் கார்த்திக், விஸ்வநாதன் மற்றும் காவலர்கள் ஞானம், மணி ஆகியோர் அடங்கிய தனிப்படையை அமைத்தார். இந்தத் தனிப்படை போலீசார் தொடர்ந்து வெங்கடேசனை தேடிவந்த நிலையில் இன்று, வெங்கடேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
இவர் மீது அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் நீதிமன்றத்தால் தண்டனை பெற்று சிறையில் இருந்து பரோலில் வந்து மீண்டும் சிறையில் ஆஜராகாமல் தேடப்பட்டு வந்த குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்து தேடப்பட்ட குற்றவாளியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.