சாத்தூர் வட்டம் – புல்வாய்பட்டி கிராமத்தில் செல்லத்துரையும் அவருடைய மனைவி முத்துலட்சுமியும் சொந்தமாக ஆடு மேய்த்துப் பிழைத்து வருகிறார்கள். அதே கிராமத்தில், கூலி வேலை பார்க்கும் வெங்கல கருப்பசாமி, மனைவி மாரீஸ்வரி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். செல்லத்துரையிடம் ரூ. 5000 விலை பேசி, ஒரு மாதம் கழித்துப் பணம் தருவதாகக் கூறி வேட்டை நாய் ஒன்றை வாங்கினார் வெங்கல கருப்பசாமி.
ஒருமாதம் கழித்து “எனக்கு இந்த நாய் வேண்டாம்..” என்று திருப்பிக் கொடுத்தபோது, வாங்க மறுத்திருக்கிறார் செல்லத்துரை. அதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், “நாயைத் திருப்பியா கொடுக்கிற?” என்று ஆவேசமான செல்லத்துரை, வெங்கல கருப்பசாமியை கத்தியால் குத்தியிருக்கிறார். முதலில் ஏழாயிரம் பண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றதைத் தொடர்ந்து, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வெங்கல கருப்பசாமி. அவர் அளித்த புகாரின் பேரில், செல்லத்துரை மீது சாத்தூர் தாலுகா காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
அதே சாத்தூர் காவல்நிலையத்தில் செல்லத்துரை மனைவி முத்துலட்சுமி வெங்கல கருப்பசாமி மீது ஒரு புகாரளித்துள்ளார். அதில், தன் கணவர் செல்லத்துரையை வழிமறித்து கத்தியால் குத்த வெங்கல கருப்பசாமி முயன்றபோது, அந்தக் கத்தியை தான் பிடுங்கியதாகவும், அப்போது தன்னை மார்பிலும் கழுத்திலும் வெங்கல கருப்பசாமி அடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், வெங்கல கருப்பசாமி மீதும் சாத்தூர் தாலுகா காவல்நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.