“சில விவகாரங்களை காலப்போக்கில் மக்கள் மறந்துவிடுகிறார்கள். அநீதி இழைப்போருக்கு அதுதான் வசதியாகி விடுகிறது. அந்த விவகாரமோ நீடித்த படியேதான் இருக்கும். அப்படி ஒரு விவகாரம்தான் இது. அந்த நபர் தற்போது யார் யாருக்கு பினாமியாக இருக்கிறாரோ, தெரியவில்லை. உலகம் முழுவதும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு சொத்துகள் சேர்த்திருக்கிறார்.
‘சென்ட்ரலில் இருந்து ஸ்டேட் வரைக்கும், அட அமலாக்கத்துறையே என் பாக்கெட்டில்தான் இருக்கிறது.’ என்று தமிழகத்தில் அதிகாரிகள் மட்டத்தில் கூவி வருகிறார். ஒன்றரை வருடங்களுக்கு முன், சென்னை, மதுரை, அருப்புக்கோட்டை என 30 இடங்களில்‘ஆபரேஷன் பார்க்கிங்’என்ற பெயரில் சோதனை நடத்தி, ரூ.163 கோடி ரொக்கப் பணம், 150 கிலோ தங்கமெல்லாம் வருமான வரித்துறையிடம் சிக்கியது. மு.க.ஸ்டாலின் கூட ‘முதலமைச்சரின் துறையான நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்தகாரர் செய்யாதுரை, நாகராஜனுக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடந்தனவே? இதுவரை பொதுமக்களின் கவனத்தில் வெளிச்சம் பாய்ச்சிடத் தக்க உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையே?’என்று கேள்வி எழுப்பினார். அதே நாகராஜ்தான், பரமசிவன் கழுத்து பாம்பாக அதிகாரிகள் மட்டத்தில் சீறி வருகிறார்.”
நாகராஜ்-
தென் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நேர்மையான உயரதிகாரி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த செய்யாதுரை மற்றும் அவருடைய மகன் நாகராஜ் நடத்திவரும் எஸ்.பி.கே. நிறுவனத்தின் இன்றைய அடாவடி நடவடிக்கைகள் குறித்து ஆதங்கப்பட்டார். சிவகாசியைச் சேர்ந்த சமுதாய பிரமுகர் ஒருவரும் அவரோடு சேர்ந்துகொள்ள, குமுறி தீர்த்துவிட்டனர்.
“சிவகாசியின் இதயமான பகுதியில் உள்ள சேர்மன் சண்முகம் நாடார் சாலையில் ஐந்து தனியார் பள்ளிகள் உள்ளன. சுமார் 8000 மாணவர்கள் படித்து வருகின்றனர். சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அந்த வழியாகத்தான் பேருந்துகள் செல்கின்றன. போக்குவரத்து நிறைந்த அந்த ரோடு குண்டும் குழியுமாக இருந்தும், சாலை சீரமைக்கும் பணியை கிடப்பில் போட்டுவிட்டார்கள். அதனால், பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல, பொது மக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். அரசாங்கத்தை ஊரே கரித்துக்கொட்டுகிறது. ஏன் இந்த நிலை தெரியுமா? விருதுநகர் மாவட்டத்தில் சாலை சீரமைக்கும் பணியை பத்து ஒப்பந்தகாரர்களிடம் பிரித்துக்கொடுத்திருந்தால் வேலை வேகமாக நடந்திருக்கும். ஆனால், மொத்த பணியையும் ஒரே ஒப்பந்தகாரரிடம் கொடுத்துவிட்டார்கள். எஸ்.பி.கே நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த வேலைகளைச் செய்துவரும் நாகராஜுக்கு, மக்கள் நலனோ, மக்கள் படும் அவஸ்தையோ ஒரு பொருட்டல்ல. காரணம் ஒப்பந்த வேலை என்ற பெயரில் அடிப்பதெல்லாம் கொள்ளையோ கொள்ளைதான்!
செய்யத்துரை-
தங்களுக்கு ஒத்துவரும் பொறியாளரை வைத்துத்தான் ஒப்பந்தப்பணிக்கான திட்ட மதிப்பீடே தயாரிக்கின்றனர். அதில், ஒரு கோடி ரூபாய்க்கான ஒப்பந்தப்பணியை இரண்டு மடங்கு அதிகமாக, அதாவது 2 கோடி ரூபாய் எனக் காட்டுகின்றனர். டெண்டர் எடுக்கும்போதே தங்களுக்கு வேண்டிய பொறியாளர் குழுவை எங்கிருந்தாலும் அப்படியே அந்த மாவட்டத்துக்கு அள்ளிக்கொண்டு வருகிறார்கள். ஒப்பந்தப்பணிகளை ஆய்வுக்கு உட்படுத்துபவர்கள் தரக்கட்டுப்பாடு அதிகாரிகள். அவர்களும் இந்த பலே ஒப்பந்தகாரரின் ஏவலுக்கு ஒத்துழைப்பவர்கள்தான். ஏனென்றால், இடமாற்றம் செய்து அவர்களை இந்த மாவட்டத்துக்கு இழுத்து வருவதே அந்த ஒப்பந்தகாரர்தானே! ஒரு கிலோ மீட்டர் சாலையில் இரண்டு இடங்களில் மட்டும் விதிமுறைகளின்படி‘திக்னஸ்’ இருப்பதுபோல் போடுவார்கள். தரக்கட்டுப்பாடு அதிகாரிகளும் குறிப்பிட்ட அந்த இரண்டு இடங்களை மட்டும் ஆய்வு செய்துவிட்டு, சாலைப்பணி சரியான முறையில் நடந்திருக்கிறது என சான்றளித்து விடுகிறார்கள். இப்படித்தான், எந்த மாவட்டத்திலும் ஒப்பந்தப்பணியை ஆரம்பிப்பதற்கு முன்பே, அந்த மாவட்டத்துக்கு தங்களுக்கு சகலத்திலும் அட்ஜஸ்ட் செய்து போகக்கூடிய அதிகாரிகளைக் கொண்டுவருவது வாடிக்கையாகிவிட்டது. அதனால்தான், தமிழகத்தில் ஏனோதானோவென்று சாலை ஒப்பந்தப் பணிகள் அரைகுறையாகவே நடக்கின்றன.
ரூ.600 கோடி ஒப்பந்தத்தின்படி, மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து கப்பலூர் வரையிலான சாலை.. விருதுநகர் மாவட்ட நெடுஞ்சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்கு ரூ,616 கோடி டென்டர்.. இதுபோல், தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் உள்ள சாலைகளை ஐந்து ஆண்டுகள் பரமாரிப்பதற்கு ரூ.2 ஆயிரம் கோடி டென்டர் என எடப்பாடி ஆட்சியில் நாகராஜ் காட்டில் நான்-ஸ்டாப்பாக பணமழை கொட்டுகிறது.
மேலிடத்தை வசமாகக் கவனித்துவிடுவதால், எளிய மனிதர்களை புழு, பூச்சிகளைப் போல்தான் பார்க்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு சம்பவம். அருப்புக்கோட்டையில் சேவை நிறுவனம் நடத்துகிறார் அந்தப் பெண். பொது நிகழ்ச்சி ஒன்றிற்காக நிதி திரட்டியபோது, பெரும் செல்வந்தர் என்ற வகையில் செய்யாத்துரையிடமும் சென்றார். ‘நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நூறு பேருக்கு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய முடியுமா?’என்று கேட்டார். அதற்கு செய்யாதுரை ‘கவுரவப் பிச்சையா எடுக்குறீங்க? இதெல்லாம் ஒரு பொழப்பா?’என்று அவமானப்படுத்திவிட்டு, ஒரே ஒரு 500 ரூபாய் தாளை நீட்டினார். இவருடைய முரட்டுப் பின்னணி தெரிந்த அந்தப் பெண், மறுக்க முடியாமல் வாங்கிக்கொண்டு, அந்த அலுவலகத்தைவிட்டு வெளிவந்ததும், தன்னோடு வந்தவரிடம் அழுது புலம்பினார்.
செய்யாதுரை நாகராஜ், அதிகாரத்தில் இருப்பவர்களிடம் வைத்திருக்கும் தொடர்பும் கணக்கும் ஒரு மாதிரியானது. திமுகவோ, அதிமுகவோ யார் ஆட்சியில் இருந்தாலும் ஒப்பந்தப்பணிகள் இவர்களுக்கே! மேலிட செல்வாக்கை மட்டுமே விரும்புபவர்கள் என்பதால், திமுக ஆட்சியில் இருக்கும்போது அதிமுகவுக்கும், அதிமுக ஆட்சியில் இருக்கும்போது திமுகவுக்கும் தாராளமாக நிதி அளிப்பார்கள். அதேநேரத்தில், அரசியல் கட்சிகளில் உள்ள ‘லோக்கல்’அல்லறை சில்லறைகள் நன்கொடை வசூல் எனக் கேட்டு இவர்களின் முன்னால் நிற்க முடியாது. விரட்டியடித்துவிடுவார்கள்.
அரசியல் ரீதியான இவர்களின் நெருக்கத்தைப் பார்ப்போம்! முன்பெல்லாம், மு.க,அழகிரியின் பரிபூரண ஆசி பெற்றவர்களாக இருந்தார்கள். வே.தங்கப்பாண்டியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, அவருடைய தம்பி ரவிச்சந்திரன், உறவு வட்டத்தில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் என திமுக தொடர்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. அடுத்து அதிமுக பீரியடில் சசிகலா, டாக்டர் வெங்கடேஷ், அதன்பிறகு, ஓ.பன்னீர்செல்வம், அவருடைய மகன் ரவீந்திரநாத் குமார், தற்போது எடப்பாடி பழனிசாமி, அவருடைய மகன் மிதுன் என இவர்களின் அரசியல் உறவுகள் பலம் வாய்ந்தவையாக உள்ளன. இந்தச் செல்வாக்கினால் தான், தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை தங்களுக்குத் தேவையான மாவட்டங்களுக்கு இவர்களால் இடமாற்றம் செய்ய முடிகிறது. நேர்மையான அதிகாரிகள் எங்கெங்கோ பந்தாடப்படுவதும் நடக்கிறது.” என்று புகார் வாசித்தனர்.
‘நெடுஞ்சாலை ஒப்பந்தப்பணியில் இத்தனை முறைகேடுகளா?’என்ற கேள்வியுடன், செய்யாதுரை, நாகராஜ் தரப்பை தொடர்புகொள்ள தொடர்ந்து முயற்சித்தோம். அவர்கள் நம் லைனுக்கே வரவில்லை. அவர்கள் விளக்கம் அளித்தால் வெளியிடுவதற்கு தயாராக இருக்கிறோம்.
தேர்தலின் போதெல்லாம் வாக்காளர்களைச் சந்தித்தே தீரவேண்டிய அரசியல் தலைவர்களே, சுயநலத்துக்காக இத்தகையோரிடம் தொடர்பும் உறவும் வைத்திருக்கும்போது, செய்யாதுரை, நாகராஜ் போன்ற ஒப்பந்தகாரர்கள் எப்படி மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்?