கிருஷ்ணகிரி அருகே, விபச்சாரத் தரகர் கொல்லப்பட்ட வழக்கில், மதுரையைச் சேர்ந்த லாரி ஓட்டுநரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கே.பூசாரிப்பட்டியைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி அருகே நின்றுகொண்டு லாரி ஓட்டுநர்களை மடக்கி விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அந்தப் பெண்ணுக்கு, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் (45) என்பவர் வாடிக்கையாளர்களைப் பிடித்துக் கொடுக்கும் தரகராக செயல்பட்டு வந்துள்ளார்.
கடந்த 17ம் தேதி அவர்கள் போலுப்பள்ளி அருகே நின்றிருந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஓட்டுநர் ஒருவரை நிறுத்தி விபச்சாரத்திற்கு அழைத்தனர். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் லாரி ஓட்டுநர் இரும்பு கம்பியால் வெங்கடேசனையும், அந்தப் பெண்ணையும் சரமாரியாக தாக்கிவிட்டுச் சென்றார். இதில், வெங்கடேசன் உயிரிழந்தார். அந்தப் பெண் படுகாயம் அடைந்தார்.
இந்தக் கொலை குறித்து குருபரப்பள்ளி காவல் ஆய்வாளர் ரஜினி விசாரணை நடத்தினார். சம்பவம் நடந்தபோது குறிப்பிட்ட நேரத்தில் அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் குறித்து தீரிர விசாரணை நடத்தினர். அதில், மதுரை மாவட்டம் விராட்டிப்பத்து - தேனி சாலையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (32) என்ற லாரி ஓட்டுநர் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. காவல்துறையினர் துரத்துவதை அறிந்த அவர், தலைமறைவானார். பொள்ளாச்சியில் பதுங்கி இருந்த அவரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (ஜன. 19) கைது செய்தனர். அவர், காவல்துறையில் அளித்துள்ள வாக்குமூலத்தின் விவரம்:
‘கடந்த 17ம் தேதி இரவு கிருஷ்ணகிரி - ஓசூர் சாலையில் லாரியை ஓட்டிச்சென்றபோது போலுப்பள்ளி அருகே சாலையோரமாக நின்றுகொண்டு ஒரு பெண்ணும், ஆணும் டார்ச் லைட் அடித்தபடி லாரியை நிறுத்தினர். அப்போது அந்தப் பெண், உல்லாசமாக இருக்க என்னை அழைத்தார். அவருடன் இருந்த நபர் 200 ரூபாய் கொடுத்தால் அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். நானும் அந்தப் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க முடிவு செய்து, அந்தப் பெண்ணிடம் 200 ரூபாய் கொடுத்துவிட்டு அவரை அங்குள்ள மறைவிடத்திற்கு அழைத்துச் சென்றேன்.
உல்லாசமாக இருந்த நேரத்தில், அந்தப் பெண் திடீரென்று என்னைப் பிடித்து தள்ளினாள். என்னிடம் பணம் வாங்கிக் கொண்டு உல்லாசமாக இருக்க மறுத்தாள். அதனால், அவளிடம் கொடுத்த என்னுடைய பணத்தைப் பறிக்க முயன்றேன்.
அப்போது அந்தப் பெண் கூச்சல் போட்டதால், அங்கு புரோக்கர் வெங்கடேசன் ஓடி வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான், லாரியில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து அந்தப் பெண்ணையும், வெங்கடேசனையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்.
ஏற்கனவே இதேபோல விபச்சார அழகி ஒருவர், கூச்சல் போட்டதால் அவருடன் வந்தவர்கள் என்னை அடித்து பணத்தைப் பறித்துச் சென்றனர். அதேபோல ஒரு சம்பவம் மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதால் நான் அவர்களை இரும்பு கம்பியால் அடித்தேன். அதில் வெங்கடேசன் இறந்துவிட்டார்.’ இவ்வாறு சுரேஷ்குமார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஜன. 19ம் தேதி இரவு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுரேஷ்குமார், நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.