
திருச்சி, துறையூர் வைரி செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி(40) என்பவருக்கு கொள்ளிமலை செல்லும் வழியில் விளை நிலம் உள்ளது. இவருடைய நிலத்திற்கு அருகே கிருஷ்ணசாமி(57) என்பவருக்கு சொந்தமான இடம் இருந்தது. இதனால் இவர்களுக்கு இடையே நிலத் தகராறு இருந்துவந்தது.
இந்நிலையில், இன்று பெரியசாமி தனது மனைவியுடன் வெளியில் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது பெரியசாமி வளர்த்து வந்த 9 கோழிகள் செத்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து கோழிகளை எடுத்துச்சென்ற போலீசார், கோழிகளுக்கு கால்நடை மருத்துவர்களை கொண்டு உடற்கூறு ஆய்வு நடைபெற்றது.
அப்போது எலி மருந்து வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அரிசியில் எலி விஷத்தை தடவி கோழிகளுக்கு துாவி கிருஷ்ணசாமி மற்றும் அவரது மகன் பிரபு(31) கொன்றது தெரிய வந்தது. இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.