![person arrested under goondas in salem](http://image.nakkheeran.in/cdn/farfuture/DcKnHrL_Z0iumLLjQSgXeF2AruGMlZr5CuLLiN6oMMs/1679728155/sites/default/files/inline-images/th_3798.jpg)
சேலத்தில் அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த ரவுடியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் கன்னங்குறிச்சி சத்தியா காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், மார்ச் 8ம் தேதி, சின்னதிருப்பதி அருகே சென்று கொண்டிருந்தபோது, வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், சேலம் ஜான்சன்பேட்டையைச் சேர்ந்த குமரன் மகன் கருப்பு அஜித் என்கிற அஜித்குமார் (24) என்பவரை அஸ்தம்பட்டி காவல்துறையினர், சம்பவத்தன்றே கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கைதான அஜித்குமார் மீது, ஏற்கனவே கடந்த 2022ம் தேதி ஜான்சன்பேட்டையைச் சேர்ந்த கார்த்தி என்பவரை இரும்பு குழாய் மற்றும் கட்டையால் தாக்கிய வழக்கு, மின்னாம்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீவரதன் என்பவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் ரவுடி அஜித்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வடக்கு சரக காவல்துறை துணை ஆணையர் மாடசாமி ஆணையருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, காவல்துறை ஆணையர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் அஜித்குமாரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.