
10 மாத இடைவெளிக்குப் பிறகு, பிப்ரவரி 8ஆம் தேதி முதல், வழக்குகளில் நேரடியாக விசாரணை தொடங்க உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், ‘கரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து, அரசு அலுவலகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதால், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளை ஆகியவற்றில், கரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பிப்ரவரி 8ஆம் தேதி முதல், வழக்குகளின் விசாரணையை நேரடியாக மேற்கொள்வது என, நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, வழக்கறிஞர்கள் விரும்பினால் காணொளிக் காட்சி மூலமாகவும் ஆஜராகலாம். நேரடி வழக்கு விசாரணையைப் பொறுத்தவரை, இறுதி விசாரணை வழக்குகள் மட்டுமே காலை, மாலை என இரு வேளைகளிலும் நடைபெறும். மற்ற வழக்குகள் காணொளி மூலமாக மட்டுமே நடைபெறும்.
பதிவுத்துறை பிரிவுகளில், ஒரு நேரத்தில் ஐந்து வழக்கறிஞர்கள் அல்லது குமாஸ்தாக்கள் அல்லது மனுதாரர்கள் ஆகியோர் அனுமதிக்கப்படுவர். நீதிமன்ற அறைகளைப் பொறுத்தவரை, ஒருமணி நேரத்திற்கு 5 வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும். ஒரு வழக்கிற்கு இரு வழக்கறிஞர்கள் வீதம், அறையின் பரப்பளவைப் பொறுத்து, 6 முதல் 10 வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழக்கறிஞர்கள், பதிவுத்துறை ஒதுக்கியுள்ள இடத்தில் காத்திருக்க வேண்டும். வழக்கு முடிந்தபின், வராண்டாவில் நிற்காமல் வெளியேறிவிட வேண்டும்.
வழக்கறிஞர் அறைகளைப் பொறுத்தவரை, சுத்தப்படுத்தவும், கிருமிநாசினி தெளிக்கவும், அறைகள் திறக்கப்பட்டு உடனடியாக மூடப்படும். அறைகளைத் திறப்பது தொடர்பாக, பிப்ரவரி இறுதியில் முடிவெடுக்கப்படும்.
உணவகங்களைப் பொறுத்தவரை, அரசு வகுத்துள்ள விதிகளின்படி திறந்துகொள்ள அனுமதி அளிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.