கரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் நோய் தொற்று அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதன் காரணமாக தமிழக அரசு பொதுத்துறை, தனியார் துறை நிறுவனங்களில் 50 சதவீதம் தொழிலாளர்களை வைத்து மட்டுமே வேலை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலியிலுள்ள என்.எல்.சி முதலாவது சுரங்கம் மற்றும் விரிவாக்கம், இரண்டாவது சுரங்கம் ஆகியவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். என்.எல்.சி நிர்வாகம் 100 சதவீதம் தொழிலாளர்களை வைத்து பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒப்பந்த தொழிலாளர்கள், இன்கோசெர்வ் தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என அதிகாரிகள் கூறுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக நெய்வேலி நகரப் பகுதிகளில் கரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாகப் பரவிவருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் நெய்வேலியில் 40க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், முதலாவது சுரங்க விரிவாக்கத்தில் பணிபுரிகிற இன்கோசெர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் முழுமையாக பணிக்கு வர வற்புறுத்துவதால், கரோனா பேரிடர் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தனிமனித இடைவெளியை என்.எல்.சி நிர்வாகம் கடைப்பிடிக்காமல் தொழிலாளர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக கூறுகின்றனர். மேலும், சுரங்கப் பகுதிக்குச் செல்வதற்கு பிக்கப் ஸ்டாண்டில் பேருந்தைப் பிடிப்பதற்கு ஒவ்வொரு ஷிஃப்ட்டிலும் தினமும் சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் ஒன்றுகூடுகிறார்கள். பேருந்தில் செல்லும்போது தனிமனித இடைவெளி இல்லை, வேலை செய்யும்போது, உணவு அருந்தும்போது சுரங்கப் பகுதிகளில் 200, 300 நபர்கள் ஒன்றுகூட வேண்டியிருப்பதால் நோய்த் தொற்று பரவும் என அச்சமடைகின்றனர்.
இதனால் சுழற்சி முறையில் பணி ஒதுக்க வலியுறுத்தியும், பிக்கப் பேருந்துகளை அதிகரிக்க கோரியும் தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த என்.எல்.சி அதிகாரிகள் மற்றும் நெய்வேலி நகர காவல்துறையினரிடம் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுடன் பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கு இரண்டு நாட்கள் பணி, ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை என்று தெளிவாக கொடுத்துள்ளது. இதேபோன்று தங்களுக்கும் வழங்க வேண்டும் எனக் கூறினர். அவர்கள் இது தொடர்பாக நிர்வாகத்துடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பணிக்குச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து மாலையில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொ.மு.ச தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் பாரி, அண்ணா தொழிற் சங்க தலைவர் வெற்றிவேல், பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் என்.எல்.சி நிர்வாக இயக்குநர் ராக்கேஷ்குமார் மற்றும் இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ஓரிரு நாளில் நல்ல முடிவு அறிவிப்பதாக இந்திய தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.