தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் 17ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் ஆய்வுக்கு சென்ற தமிழக முதல்வர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் 'பல இடங்களில் தேங்கியமழை நீர் இன்று வடியத் தொடங்கியுள்ளது' என கேள்வி எழுப்பத் தொடங்கிய உடனே, முதல்வர் பதிலளிக்கையில் ''நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா இன்னும் இதை டுவிஸ்ட் பண்ணி நிறைய பேர் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கெல்லாம் செய்தியாளர்கள் தான் விளக்கம் கொடுக்க வேண்டும். கடந்த மூன்று மாதமாகவே மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். திருப்புகழ் என்ற ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு கமிட்டி போட்டு ஆட்சிக்கு வந்தபோதே அதற்கான பணிகளை தொடங்கினோம். அந்த பணிகளை கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொண்டிருக்கிறோம்.
ஒரேடியாக செய்து முடிக்க முடியாது. ஓரளவுக்கு முடிந்திருக்கிறோம். இன்னும் 25 சதவிகித 30 சதவிகித பணிகள் இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. அதையும் முடித்து விடுவோம். சென்னை மக்களுக்கும் சென்னையை ஒட்டியுள்ள புறநகர் மக்களுக்கும் நிச்சயமாக நிரந்தரமான தீர்வு கிடைக்கும். தூய்மை பணியாளர்கள், அதிகாரிகள், அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள் என பல்வேறு துறை அதிகாரிகள் முழுமூச்சாக இந்த பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் வெற்றி கண்டிருக்கக்கூடிய அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.