பெரியார் பல்கலைக்கழகம் ஆசிரியர்கள் நியமனத்தில் சமூகநீதி நிலை நாட்ட வேண்டும் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், பெரியாரின் பெயரில் இயங்கும் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்திலேயே சமூக நீதிக்கு முரணான ஒரு செயலை நடைமுறைப்படுத்த பல்கலைக்கழக துணைவேந்தர் முனைந்துள்ளதாக அறிகிறோம்.
அந்தப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி இயக்குநராக பணியாற்றி வந்த அங்கமுத்து என்பவர் தற்கொலை செய்துகொண்டு விட்டதனாலும், நூலகராக பணியாற்றி வந்த சுப்பிரமணியம் என்பவர் ஓய்வு பெற்றுவிட்டதாலும் அவ்விரண்டு பணியிடங்களும் தற்போது காலியாக இருக்கின்றன. அவ்விரு பணியிடங்களும் பொதுப் போட்டியின் அடிப்படையில் முன்னர் பணி நியமனம் செய்யப்பட்டு இருந்ததனால், தமிழ்நாடு அரசின் 200 புள்ளி இட ஒதுக்கீட்டு சுழற்சி முறையின்படி இம்முறை பட்டியலினம் அருந்ததியருக்கு அந்த இடங்கள் ஒதுக்கப்பட்டுத்தான் பணித்தேர்வு நடைபெற வேண்டும். ஆனால், தொடர்ந்து பல ஆண்டுகளாக சமூக நீதியைப் பின்பற்றாத சேலம் பல்கலைக் கழகம் இந்த முறையும் பொதுப்போட்டி என்ற அடிப்படையிலேயே தேர்வு நடைபெறும் என்று கடந்த ஆண்டு 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் விளம்பரம் செய்திருந்தது.
இவ்வாறான பணித்தேர்வோ, விண்ணப்பங்களோ ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையில், இப்போது அந்த காலக்கெடுவைத் தாண்டிய பின்னாலும் எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் நாள் அதற்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நூலகர் பணிக்கு 10 ஆண்டு நூலகராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும் என்பது தகுதியாக இருந்தபோதிலும் தற்போது நூலக அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் தன்னுடைய உறவினர் ஜெயபிரகாஷ் என்பவரை அந்தப் பணிக்கு கொண்டு வர வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பணித்தேர்வுக்கு அடுத்த நாளான செப்டம்பர் 26ஆம் நாள் ஆட்சி மன்றக்குழுவின் கூட்டத்தைக் கூட்டி ஒப்புதல் பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் துணைவேந்தர் செயல்பட்டு வருவதாக அறிய வருகிறோம்.
கடந்த மாதம் பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக்கு வந்திருந்த தமிழக அரசின் சமூக நீதி கண்காணிப்புக் குழு சமூக நீதி விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தும் இவ்வாறான முறைகேட்டில் துணைவேந்தர் ஈடுபட முயல்வது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். எனவே இரு பதவிகளுக்கும் பட்டியலினம், அருந்ததியர் இனத்திற்கானது என புதிதாக விளம்பரம் செய்து, தகுதியுள்ள நபரை முறையாகத் தேர்வு செய்வதின் வழியாக சமூகநீதிக்கு எதிரான போக்கினை இனியும் தொடராமல் கைவிடுமாறு பல்கலைக் கழக துணைவேந்தரை வலியுறுத்துகிறோம்.
அதுபோலவே தமிழக அரசும், உயர்கல்வித் துறை அமைச்சரும் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அறிவுறுத்தி இந்த தான்தோன்றித்தனமான முறைகேட்டினை தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.