பெரியார் பல்கலைக்கழகத்தில் சுமார் 3 ஆண்டுகளாக துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாகப் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக துணைவேந்தரே தனி நிறுவனம் தொடங்கியிருப்பது விதிமீறல் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து விதிகளை மீறி கல்வி நிறுவனம் நடத்திய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி மாலை 4 மணியளவில் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி, கூட்டுச்சதி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
போலீசாரின் விசாரணையை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட மறுத்த மாஜிஸ்ரேட் தினேஷ்குமார், ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டதில் நடந்த மோசடியில் கைதான துணைவேந்தர் ஜெயராமனின் தனிச் செயலாளர், பொறுப்பு பதிவாளர், கண்காணிப்பாளர் உட்பட 5 பேர் நாளை (04.01.2023) காலை விசாரணைக்கு ஆஜராக சேலம் கருப்பூர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.