ஊழல் புகாரில் கைதான பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன். இவரும், பல்கலையில் நிரந்தர பொறுப்பு பதிவாளராக உள்ள தங்கவேல், கணினி அறிவியல் துறை இணை பேராசிரியர் சதீஸ், பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் ராம் கணேஷ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து பியூட்டர் பவுண்டேஷன் என்ற பெயரில் தனியார் நிறுவனத்தை, பெரியார் பல்கலை முகவரியில் தொடங்கி உள்ளனர்.
இந்த நிறுவனத்தின் கீழ் செயல்படுவதற்காக பெரியார் பல்கலை வளாகத்தில் உள்ள 2024 சதுர அடி பரப்பளவு உள்ள கட்டடத்தை ஆக்கிரமித்து, பியூட்டர் பார்க் என்ற பெயரில் அலுவலகம் திறந்துள்ளனர். இது தவிர, நிரந்தர பொறுப்பு பதிவாளர் தங்கவேல் மட்டும் தனியாக அப்டெக் ஆன் போரம் என்ற நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். இவர்கள், பியூட்டர் பவுண்டேஷன் நிறுவனத்தை அரசு சாரா மற்றும் லாப நோக்கமற்ற நிறுவனம் என்று சொல்கின்றனர். ஆனால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒப்பந்தம் செய்து கொண்டு, அந்த மருத்துவமனை நடத்தும் பாராமெடிக்கல் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றனர்.
இதற்காக வசூலிக்கப்படும் மாணவர் சேர்க்கைக் கட்டணத்தில் 60 சதவீதத்தை பியூட்டர் பவுண்டேஷனும், 40 சதவீதத்தை அந்த மருத்துவமனையும் பங்கு போட்டுக் கொள்ளும். நிலைமை இப்படி இருக்க, இது எப்படி லாபநோக்கமற்ற நிறுவனம் என்று சொல்ல முடியும் என பலர் கேள்வி எழுப்புகின்றனர். பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு பெரியார் பல்கலை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் ஒப்பந்தம் போட்டுள்ளனர். அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, ஒருவர் பணியில் இருக்கும்போதே தனியாக நிறுவனங்களை தொடங்கக் கூடாது. இவர்கள் தனியாக நிறுவனம் தொடங்கியதோடு, பல்கலையின் சொத்துகளை தங்கள் இஷ்டத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.
பியூட்டர் பார்க் அலுவலகத்திற்காக கையகப்படுத்தியுள்ள கட்டடத்திற்கு ஆண்டுக்கே 1000 ரூபாய்தான் வாடகை நிர்ணயம் செய்துள்ளனர். இந்த சொற்ப தொகையில், பல்கலையின் மின்சார வசதி முதல் கணினி உள்ளிட்ட அனைத்து உபகரணங்கள், தளவாடங்களையும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிறது ஒப்பந்தம். அதேநேரம், இதே பல்கலை வளாகத்தில் கனரா வங்கிக்கு மாதம் 21 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விட்டுள்ளனர். துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இவ்வாறு பல்கலை மற்றும் அரசு நிதியை கையாடல் செய்துள்ளனர். இவர்கள் தொடங்கிய நிறுவனத்திற்கு பல்கலை சிண்டிகேட் குழுவும், உயர்கல்வித்துறையும் ஒப்புதலும் தரவில்லை.
இதுகுறித்து பெரியார் பல்கலை தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் ஏற்கனவே அரசுக்கு விரிவான புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக துணைவேந்தரை நேரில் சந்தித்துப் பேசுவதற்காக டிச. 26ம் தேதி பல்கலைக்குச் சென்றிருந்தார். அப்போது அவரை பார்த்த துணைவேந்தர் ஜெகநாதன், எல்லாருக்கும் புகார் சொல்லிவிட்டீர்கள். இனிமேல் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று சாதாரணமாக ஆரம்பித்தவர், திடீரென்று இளங்கோவனை சாதி பெயரைச் சொல்லி திட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த இளங்கோவன், உடனடியாக சேலம் கருப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
விதிகளை மீறி பியூட்டர் பவுண்டேஷன் தொடங்கப்பட்டது, அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியது, தன்னை சாதிப்பெயர் சொல்லி திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்தது குறித்து, புகாரில் தெரிவித்து இருந்தார். இந்தப் புகாரின்பேரில், கருப்பூர் காவல்நிலைய காவல்துறையினர், ஜெகநாதன் மீது சாதி வன்கொடுமை, போலி ஆவணம் தயாரித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்த அதே சூட்டோடு துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர்.
வழக்கமான நடைமுறைகள் முடிந்த பிறகு, இரவு 11.15 மணியளவில் சேலம் ஜேஎம்-2 நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர். ஜெகநாதன் தரப்பில் மட்டும் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகியுள்ளனர். ஜெகநாதன் தனக்கு பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதாகவும், ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் கோரினார். இதைப் பரிசீலித்த மாஜிஸ்ட்ரேட், அவருக்கு 7 நாட்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்படாமலேயே விடுவிக்கப்பட்டார். அதேநேரம், தினமும் அவர் சூரமங்கலம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து டிச. 27ம் தேதி காலையில் ஜெகநாதன், சூரமங்கலம் காவல்நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்தார். கையெழுத்துப் போட்டுவிட்டு, வீடு திரும்பினார். பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பதற்றம் அடைந்த உறவினர்கள், அவரை உடனடியாக சேலம் 5 சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பின்னர் அவர், ஐசியு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, புகார்தாரர் இளங்கோவன், ஜெகநாதனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார். பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்ட விவகாரம் உயர்கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, தலைமறைவாகிவிட்ட நிரந்தர பொறுப்பு பதிவாளர் தங்கவேல், பேராசிரியர்கள் சதீஸ், ராம் கணேஷ் ஆகியோரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.