சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து மற்றும் உணவியல் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தவர் நாஸினி. கடந்த வெள்ளியன்று (ஆக. 27) இரவு 8 மணியளவில் திடீரென்று அவரை பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் சம்பந்தப்பட்ட பேராசிரியருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியுள்ளது. ஆனால், என்ன காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அதில் குறிப்பிடப்படவில்லை.
புதிய துணைவேந்தராக ஜெகநாதன் பொறுப்பேற்று இரண்டு மாத காலம் ஆகியுள்ள நிலையில், அவர் முதன்முதலில் ஒருவரை பணியிடைநீக்கம் செய்துள்ளது, பல்கலை வட்டாரத்தில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் ஒருவரிடம் பேராசிரியர் நாஸினி பணம் வாங்கியதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கசிந்துள்ளன. இது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் சென்றதால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக நாஸினியின் தரப்பைக் கேட்பதற்காக அவரை தொடர்பு கொண்டபோது அவர் சார்பில் அவருடைய கணவர் பேசினார். ''பணியிடைநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. துணைவேந்தர் நேரில் சந்தித்துப் பேச வாய்ப்பு தரவில்லை. ஒருமுறை செல்போனில் கேட்டபோது, 'அது ஹைலி கான்பிடன்ஷியல்' என்றும், 'இது குறித்து விசாரிக்கக் குழு அமைக்கப்படும்','' என்று துணைவேந்தர் கூறியதாகத் தெரிவித்தார்.
துணைவேந்தர் ஜெகநாதனிடம் கருத்தறிய அவரை பலமுறை தொடர்பு கொண்டும் செல்போனை எடுக்கவில்லை.
இதுபற்றி பல்கலை பேராசிரியர்கள் தரப்பில் நம்மிடம் பேசினர். ''பொதுவாக ஒருவர் மீது புகார் எழுந்தால் முதலில் விளக்கம் கேட்டுக் குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பப்படும். அந்த விளக்கத்தின் அடிப்படையில் சிண்டிகேட் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகே பணியிடைநீக்க உத்தரவோ அல்லது தண்டனை ரத்து உத்தரவோ பிறப்பிக்கப்படும்.
கண் முன்னால் நடக்கும் குற்றச்சம்பவங்கள் மீது மட்டுமே சிண்டிகேட் குழுவின் ஒப்புதல் பெறுவதற்கு முன்பே உடனடியாக உத்தரவு பிறப்பிக்க முடியும். ஆனால், நாஸினி மீது என்ன வகையான குற்றச்சாட்டு உள்ளது என்றே வெளிப்படையாகத் தெரியவில்லை. காரணங்களைச் சொல்லாமலே ஒருவரை பணியிடை நீக்கம் செய்வது என்பது துணைவேந்தரின் சர்வாதிகார போக்கைக் காட்டுகிறது.
நாஸினி, எத்தனையோ ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி இருக்கிறார். அவரை பற்றி நல்ல அபிமானம்தான் பலருக்கும் உள்ளது. அதேநேரம், தன் மீது எந்த தவறும் இல்லை என்று கருதினால் நாஸினியும் பல்கலைக்கழக நடவடிக்கையை எதிர்த்து இந்நேரம் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும். அதை ஏன் அவர் செய்யவில்லை என்பது தெரியவில்லை. இந்த விவகாரத்தில் ஏதோ சில மர்ம முடிச்சுகள் இருக்கின்றன,'' என்கிறார்கள் பேராசிரியர்கள்.
மற்றொரு தரப்போ, ''மாணவரிடம் நாஸினி பணம் பெற்றதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் சென்றதால்தான் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படிப் பார்த்தால் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த காலங்களில் 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாகப் பலமுறை முதல்வரின் தனிப்பிரிவுக்குப் புகார்கள் சென்றுள்ளன.
போலி பணி அனுபவச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த, பணம் கொடுத்து பதவிகளைப் பெற்ற பேராசிரியர்கள் பற்றியெல்லாம் புகார்கள் சென்றுள்ளன. அவற்றின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் நாஸினி மீதான நடவடிக்கையின் பின்னணியில் வேறு ஏதோ மர்மங்கள் அடங்கியிருக்கலாம் என்று கருதுகிறோம்,'' என்கிறார்கள்.