விழுப்புரத்தில் லாரி மோதி பெரியார் சிலை சேதமடைந்தது தொடர்பாக வடமாநில டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் விழுப்புரம் காமராஜர் வீதி வழியாக வந்த கன்டெய்னர் லாரி திடீரென பெரியார் சிலை மீது மோதியது. இதில் அந்த சிலை பீடத்துடன் உடைந்து முற்றிலும் சேதம் அடைந்தது. இது பற்றிய தகவல் அறிந்து விழுப்புரம் நகர போலீசார் அங்கு விரைந்து சென்று கன்டெய்னர் லாரி டிரைவரை மடக்கிப் பிடித்தனர். இதனிடையே எஸ்.பி.ஸ்ரீநாதா, துணை எஸ்.பி. பார்த்திபன், தாசில்தார் அனந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அந்த கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மகாராஷ்டிராவை சேர்ந்த மச்சீந்திரா தபலி (வயது 52) என்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் விசாரணையில் செய்ததில், புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து வாகனங்களுக்கு பயன்படுத்தும் டயர்களை ஏற்றிக் கொண்டு புனேவுக்கு அந்த கன்டெய்னர் லாரி புறப்பட்டதும், வழிதவறி விழுப்புரம் காந்தி சிலை வழியாக காமராஜர் வீதிக்குள் வந்தபோது எதிர்பாராதவிதமாக பெரியார் சிலை மீது மோதியதும், இதில் சிலை உடைந்து சேதம் அடைந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக கன்டெய்னர் லாரி டிரைவர் மச்சீந்திரா தபலியிடம் விழுப்புரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தினார். பின்னர் அவரை கைது செய்தார். லாரியை பறிமுதல் செய்து விழுப்புரம் ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு சென்றனர். சம்பவ நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து அடுத்த கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பெரியார் சிலை சேதம் அடைந்த சம்பவம் பற்றிய தகவல் உடனடியாக பரவியது. இதையடுத்து அரசியல் கட்சியினரும், பொதுமக்கள் பலரும் அங்கு திரண்டதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர தி.மு.க. செயலாளர் சக்கரை தலைமையில் அந்த கட்சியினர் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் சேதம் அடைந்த பெரியார் சிலையை கைப்பற்றி விழுப்புரம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள ஒரு அறையில் சிலையை வைத்து சீல் வைத்தனர்.