திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சமூக விலக்கல் மற்றும் உட்கொணர்வு கொள்கை ஆய்வு மையம், சமூகவியல் துறை சார்பில், சமூகநீதி மற்றும் அறிவொளியின் இரண்டாவது தொடரின் விரிவுரை நேற்று (27-10-2021) நடைபெற்றது. இதில் அந்தப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சார்பில் ‘பெரியாரும் இஸ்லாமும்’ என்ற தலைப்பில் பகுத்தறிவு சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், புதிய விடியல் இணை ஆசிரியர் ரியாஸ் அகமது சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேள்வி கேட்கப்போவதாக அறிவித்து, இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் மற்றும் பலர் பல்கலைக்கழகத்துக்குத் திரண்டு சென்றனர். அப்போது திரண்டுவந்த இந்து முன்னணியினரைப் பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி ‘அனுமதியின்றி உள்ளே செல்லக் கூடாது’என்று கூறினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் கூறியதாவது, “பல்கலைக்கழகத்தில் நடக்கும் கருத்தரங்கில் அனைவரும் கலந்துகொள்ளலாம் என விளம்பரப்படுத்தியுள்ளனர். ஆனால், எங்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர்” என்றார். பின்னர் இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநரிடம் முறையிடப் போவதாகக் கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.