Skip to main content

பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது!

Published on 15/12/2017 | Edited on 15/12/2017
பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது!

காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், ராஜஸ்தான் போலீசாரின் தேடுதல் வேட்டையில் பயங்கர கொள்ளையன் நாதுராமின் நெருங்கிய கூட்டாளி தினேஷ் சவுத்ரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான நாதுராம் உள்ளிட்ட 2 பேரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கடந்த 8–ந்தேதி அன்று ராஜஸ்தான் மாநிலம் சென்றனர்.

மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி, தலைமையில் கொளத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் முனிசேகர் உள்ளிட்ட 4 பேர் ராஜஸ்தான் சென்றனர். அங்கு கொள்ளையர்களை அவர்கள் பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் பெரியபாண்டி உயிரிழந்தார். அவருடன் சென்ற கொளத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் முனிசேகர் காயமடைந்தார். காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொல்லப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் அல்லாமல், தமிழகத்திலும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இந்த கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளிகள் நாதுராமும், தினேஷ் சவுத்ரியும் ஆவார்கள். இந்நிலையில் தினேஷ் சவுத்ரியை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வைத்து, அதிரடியாக ராஜஸ்தான் போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். அங்குள்ள கடை ஒன்றில் திருட முயற்சித்தபோது, அவரை மடக்கிப்பிடித்துள்ளனர்.

காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை நடத்துவதற்காக ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ள சென்னை இணை போலீஸ் கமி‌ஷனர் சந்தோஷ்குமார்,  கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தினேஷ் சவுத்ரியை நாங்களும் கைது செய்து சென்னை அழைத்து வருவோம். விரைவில் நாதுராம் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்