'திமுக பவள விழா தொண்டர்களுக்காக நடத்தப்பட்டது அல்ல, உதயநிதிக்கு முடி சூட்டுவதற்கு ஒரு ஆரம்ப விழா தான் அது' என தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''உதயநிதி துணை முதலமைச்சரராக பதவியேற்று விடுவார்; முதலமைச்சர் அறிவாலயத்திற்கு வந்துவிட்டார்; எல்லா அமைச்சர்களும் வந்து விட்டார்கள் என பல செய்திகள் வந்தது. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் நிச்சயமாக இருக்காது. காரணம் அவர்கள் பகுத்தறிவுவாதிகள். நல்ல நாள் இல்லாமல் பதவியேற்பு வைத்திருக்கவே மாட்டார்கள். நான் இன்னும் சேலஞ்ச் பண்றேன். ஒருவேளை உதயநிதி துணை முதலமைச்சர் ஆகுவது என்றால் அன்று முகூர்த்த நாளாக இருக்கிறதா இல்லையா என்று பாருங்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு முகூர்த்த நாளாக இருக்காது அவர்களுக்கு முகூர்த்த நாளாக இருக்கும்.
மக்களை அப்பட்டமாக ஏமாற்றுகிறார்கள். எல்லாவற்றையும் விட கவலைப்பட வேண்டியது துரைமுருகனையே உதயநிதியை துணை முதலமைச்சராக கொண்டுவர வேண்டும் என சொல்ல வைத்து விட்டார்கள். பவள விழா தொண்டர்களுக்காக நடத்தப்பட்டது அல்ல, உதயநிதிக்கு முடி சூட்டுவதற்கு ஒரு ஆரம்ப விழா தான் அது. இதைத்தான் நாங்கள் வாரிசு அரசியல் என்று சொல்கிறோம். திமுக தொண்டர்கள் சிந்திக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் சொல்கிறார் திமுகவின் 25 வது ஆண்டின் போது நாம் ஆட்சியில் இருந்தோம், கட்சி ஐம்பதாவது ஆண்டை கடந்த பொழுதும் நம் ஆட்சியில் இருந்தோம், 75 வது ஆண்டை தொட்ட போதும் நாம் ஆட்சியில் இருக்கிறோம் என்று சொல்கிறார்.
25 ஆம் ஆண்டை திமுக கொண்டாடிய பொழுது கலைஞர் ஆட்சியில் இருந்தார். 50 வது ஆண்டை திமுக தொட்ட பொழுது மீண்டும் கலைஞர் முதல்வராக இருந்தார். 75 ஆவது ஆண்டு பவள விழா கொண்டாடும் பொழுது மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். நூறாவது ஆண்டு விழா கொண்டாடும் பொழுது உதயநிதி, 125 ஆண்டு விழா கொண்டாடும் பொழுது உதயநிதியின் மகன் இருப்பார். பாவம் திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். கலைஞர் கொண்ட பிழைத்துக் கொண்டே இருக்கும்'' என்றார்.