ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு, 30 நாட்கள் 'பரோல்' வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் அவர் பரோலில் சென்றார். இந்த நிலையில், அவருக்கு பரோலை நீட்டிக்க வேண்டும் என்று அவரது தாயார் கோரியிருந்தார். இதனால், அவருக்கு மேலும் பரோல் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், பேரறிவாளனுக்கு சிறுநீரகப் பிரச்சனை இருப்பதாகவும் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக, விழுப்புரத்தில் உள்ள மருத்துவர் ரவிச்சந்திரன் என்பவரிடம், சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை வேலூரில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் விழுப்புரம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.
மேலும், சில மருத்துவப் பரிசோதனைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பரிசோதனைகளுக்குப் பிறகு, அவர் இங்கேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. பேரறிவாளன், மருத்துவமனைக்கு வந்துள்ளதை அடுத்து அவருடன் பாதுகாப்புக்கும் மருத்துவமனைப் பகுதியிலும், பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.