திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள தீண்டாமை சுவர் காவல் துறை உதவியுடன் இடிக்கப்பட்டது.
நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வரும் தோக்கமூர் கிராமத்தில் திரௌபதி அம்மன் ஆலையத்தின் அருகே 2015ம் ஆண்டு மதில் சுவர் ஒன்று கட்டப்பட்டது. மாற்று சமூகத்தினர் கட்டிய அந்த சுவரால் பட்டியலின மக்கள் கால்நடை மேய்ச்சலுக்கும் கூலித்தொழிலுக்கும் அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தீண்டாமை சுவரை இடிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு சுவரை இடிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை அடுத்து வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் தீண்டாமை சுவரை இடித்து அப்புறப்படுத்தினர்.
இதனிடையே அங்குள்ள திடலை சுற்றி அமைக்கப்பட்ட முள்வேலியை அகற்றவில்லை எனக் கூறி அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மதில் சுவர்மட்டும் இடிக்கப்பட்ட நிலையில் பின் வரும் நாட்களில் அதற்கான பணிகளில் ஈடுபடலாம் என அதிகாரிகள் பொது மக்களுக்கு வாக்குறுதி கொடுத்ததால் அங்கிருந்தவர்கள் களைந்து சென்றனர்.