
இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 13ஆம் தேதிவரை நடைபெறவிருந்தது. அதன்படி ஜூலை 19ஆம் தேதிமுதல் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற துவங்கியது. இதில் எதிர்க்கட்சியினர், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து கடந்து 9 மாதங்களாக போராடிவரும் விவசாயிகள் பற்றி பேசவும், பெகாஸஸ் விவகாரம் பற்றியும் பேச அனுமதி தரவில்லை என குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், “டெல்லியில் கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் போராடிவருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்தோ, மக்களின் பிரச்சனைகள் குறித்தோ நாடாளுமன்றத்தில் பேச அனுமதி அளிப்பதில்லை.
எனவே, ஆகஸ்ட் 23 முதல் 27ஆம் தேதி வரை தமிழகத்தில் 5,000 இடங்களில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். இவற்றில் தீர்மானங்களை நிறைவேற்றி, நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க உள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, வரும் 23ஆம் தேதி சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள கங்கையம்மன் கோயில் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சியை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கிவைக்கவுள்ளார். இதில், சி.பி.ஐ. தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன், துணைச் செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.