நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை பேசுகையில், ''இந்தியாவில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது. ஆனால் பிரதமர் அவருடைய வசதிக்கு ஏற்ப தேர்தல் ஆணையத்திடம் அவருடைய சுற்றுப்பயண நிகழ்வுகளை ஒட்டி ஒரு கட்டம் முதல் ஏழு கட்டமாக தேர்தலை அவர் வசதிக்காக அவருடைய நிகழ்ச்சி நிழலுக்காக அறிவிப்பு செய்து இருக்கிறார். அந்த அடிப்படையில் மாநகராட்சி தேர்தல், ஊராட்சி மன்றத் தேர்தலுக்கு எப்படி மாவட்ட தலைவர்கள் பரப்புரை செய்வார்களோ அப்படி சென்னைக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்ந்து வருகிறார்.
எப்படியாவது தமிழ் மண்ணில் காலை பதிக்க முடியுமா என்ற பேராசை அவருக்கு இருக்கிறது. ஒருபோதும் தமிழ்நாட்டில் நடக்காது. தமிழர்கள் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தையும், பிரித்தாலும் கொள்கையில் ஈடுபட்டிருக்கும் பாஜகவையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த மண் சமூக விடுதலை காணும் மண். சமூக நீதிக்கான மண். ஆகவே ஆர்எஸ்எஸ் உடைய சித்தாந்தம்; பாஜக உடைய பிரித்தாலும் கொள்கை; இந்தியர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது; உள்நாட்டு மக்களை வெளிநாட்டு சக்திகளுக்கு விட்டுக் கொடுத்தல்; வெளிநாட்டு சக்திகளிடம் நிதி பெறுதல் இதுபோன்ற நாட்டிற்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தேர்தலில் இந்திய மக்கள் இப்படிப்பட்ட பாசிச சக்திகளை அனுமதிக்க மாட்டார்கள்'' என்றார்.