நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் வாக்களிக்கச் சென்ற ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அ.தி.மு.க.வினர் தாக்கியதாக, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், அவரை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியின் இல்லத்திற்கு நேரில் அழைத்துச் சென்று ஆஜர்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தனது தந்தையை காவல்துறையினர் 25 பேர் வீடு புகுந்து இழுத்துச் சென்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயவர்தன் புகார் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட வந்தவரை விரட்டிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மக்கள் விரோத தி.மு.க. அரசு, அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்கில் கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, வெகுஜன மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்த தி.மு.க. தற்போது, சட்ட விரோதமாக அதிகார துஷ்பிரயோகத்தின் வாயிலாக இது போன்ற செயல்களை செய்து வருகிறது. இந்த நியாயமற்ற செயல்களுக்காக விடியா அரசிற்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.