நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த நிலையில், அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து நாம் தமிழர், பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் டி.டி.வி.தினகரன் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். பாஜக கூட்டணியில் 2 தொகுதிகளில் அமமுக போட்டியிடும் நிலையில் தேனியில் டி.டி.வி. தினகரன், திருச்சியில் செந்தில்நாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
செய்தியாளர்களைச் சந்தித்து பட்டியலை வெளியிட்ட டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''தேனியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தேனி மக்கள்தான் முடிவு செய்வார்கள். அரசியலில் நான் பிறந்த மண் தேனி தான். அங்கு என்னை எதிர்த்துப் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் என்னுடைய முன்னாள் நண்பர்தான். கடுமையான பண வீக்கத்திலும் சிறந்த நாடாக இந்தியாவை உருவாக்கியுள்ளார் மோடி. பிரதமராக மீண்டும் மோடி வரப் போகிறார் என்பது தெரிந்து விட்டது' என தெரிவித்தார்.