பாதாள சாக்கடைக்கோ அல்லது கேபிள் பதிக்கவோ சாலையை வெட்டி குழி தோண்டுகிறார்கள் அதன்பிறகு அந்த குழியை மூடுவதே இல்லை. மக்கள் அதில் விழுந்து கை, கால் உடைந்து போக வேண்டியுள்ளது என ஈரோடு மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
ஈரோடு திண்டலில் இருந்து ரிங் ரோடு செல்லும் வழியில் அமைந்துள்ளது ஜீவா நகர் சாலை. சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் இந்த சாலையையொட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த ரோடு வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக திண்டல் பகுதியிலிருந்து ரிங் ரோடுக்கும் அங்கிருந்து திண்டலுக்கும் ஏராளமான வாகனங்கள் வருகின்றன.
இரவு நேரங்களிலும் குடியிருப்பு பகுதி மக்கள் வேலைக்கு சென்று வருவதும் அதிலும் பெண்கள் அதிக அளவில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்கிறார்கள். ஆனால், தற்போது இந்த பகுதியில் உள்ள ரோடு குண்டு குழியுமாக காட்சியளித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அரசின் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட ரோடு, பின்னர் தார் போடாமல் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் ரோட்டில் ஆங்காங்கே நீர் தேங்கி உள்ளது. இந்தப் பகுதியில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறிக் கீழே விழுந்து பெரும் விபத்து ஏற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது.
எனவே இந்த ரோட்டை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் பல முறை மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். எதுவும் நடக்கவில்லை. இதனால் அரசு நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.