ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சை கோபி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் எல்லமடை. இந்த கிராமத்தில் 1992 முதல் 1995-ஆம் ஆண்டு வரை, 204 குடும்பங்களுக்கு அப்போது போக்குவரத்து அமைச்சராக இருந்த செங்கோட்டையன் இலவச வீட்டுமனைகள் வழங்கினார். இதில் சிலருக்கு அரசு சார்பில் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. அதில், 97 பயானாளிகளுக்கு வீடு கட்டி தராத நிலையில் அவர்கள் வெளியூர்களுக்குச் சென்று கூலி வேலை செய்துவந்தனர். இந்நிலையில் தற்போது அரசு சார்பில் பசுமைவீடுகள் கட்டுவதற்காக, 97 குடும்பத்தினரும் விண்ணப்பித்தபோது அவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டா ரத்து செய்யப்பட்டு வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த கிராம மக்கள் இன்று (19.12.2020) அரசு வழங்கிய பட்டாவுடன் வந்து கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தையும் அவர்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் வருவாய்த்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு எல்லமடை கிராமத்தில், வீடற்றவர்களைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வீட்டுமனைப் பட்டா வழங்கியபோது ஒரு சிலருக்கு மட்டும் அரசு வீடு கட்டி கொடுத்தது. மற்றவர்களுக்கு இதுவரை வீடு கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஏற்கனவே வீட்டுமனைப் பட்டா கொடுக்கப்பட்டவர்களுக்கே இலவசப் பட்டாக்களைத் திரும்ப அளிக்கவேண்டும் என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எல்லமடை பேருந்து நிறுத்தம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், 'பொலவக்காளிபாளையம் - அத்தாணி' சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் தியாகராஜு, காவல்ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் காவல்துறையினர், வருவாய்த் துறையினர் மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தள்ளுபடி செய்யப்பட்ட பட்டாதாரர்களுக்கே மீண்டும் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அமைச்சர் செங்கோட்டையனும் அதையே வலியுறுத்தியுள்ளதாகவும் உறுதிகொடுத்தனர். அதன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்துசென்றனர். இதனால், கோபிசெட்டிபாளையம் பகுதியில் சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.