தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாகப் பிரச்சார வேலைகளைச் செய்து வருகிறார்கள். திமுக, அதிமுக தரப்பில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளார். குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்த எதிர்க்கட்சி தலைவரின் பேச்சுக்கு முதல்வர் இன்று நேரடியாக பதில் அளித்துள்ளார். திமுக, அதிமுக ஒருபுறம் என்றால் பாஜக இந்த தேர்தலில் தனியாகக் களம் காண்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களில் தங்கள் கட்சி வேட்பாளர்களை பாஜக களம் இறக்கியுள்ளது.
இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறும்போது, "மத்தியில் எட்டு வருடங்களாக பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. தமிழக மக்கள் இந்த ஆட்சியைப் பாராட்டுகிறார்கள், ரசிக்கிறார்கள். இன்னும் 80 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடர்ந்து இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் தமிழகத்தில் திமுகவின் 8 மாத ஆட்சியில் மக்களுக்கு சலிப்பு வந்துவிட்டது. பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் வழங்கினார்கள். ஆனால் அதனை மக்கள் பயன்படுத்த முடியவில்லை.
அந்த அளவுக்கு தரமற்ற பொருட்களை மக்களுக்கு அவர்கள் வழங்கினார்கள். இந்த உள்ளாட்சித் தேர்தலில் முதல்வர் பிரச்சாரத்துக்கு வரவில்லை. ஏனென்றால் அவர் மக்களைச் சந்திக்கப் பயப்படுகிறார். அவர் ஒட்டுக்கேட்க வந்தால் அவரிடம் ரூ.1000 எங்கே என்று கேளுங்கள். இந்த கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியும் இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவிலிருந்தே விரட்டியடிக்கப்பட வேண்டிய கட்சி. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கண்டிப்பாக அதிக இடங்களில் வெற்றிபெறும் " என்றார்.