போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்கவே சர்வதேச தரத்தில் எட்டு வழிச்சாலைத் திட்டம் கொண்டு வரப்படுவதால், இத்திட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (டிசம்பர் 13, 2018) மாலை நடந்தது. ஈரடுக்கு பேருந்து நிலையம், ஐந்தடுக்கு வாகன நிறுத்துமிடம் உள்பட ரூ.166.52 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியது:
சர்வதேச தரத்தில் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை அமைப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இப்போதுள்ள நிலவரப்படி 150 சதவீதம் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 250 மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
வாகன பெருக்கத்தால் சாலை விபத்துகள் பெருகும். அவற்றால் விலைமதிப்பற்ற உயிர் பலிகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல நேரமும், எரிபொருளும் விரயம் ஆகிறது. இவற்றை எல்லாம் தடுப்பதற்காகவே வெளிநாடுகளில் இருப்பதுபோல், போக்குவரத்து நெரிசலை குறைக்க எட்டு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், சில அமைப்புகள் இத்திட்டத்திற்கு தடையாக இருந்து வருகின்றன. இதனால்தான் இத்திட்டம் ஜவ்வுபோல் இழுத்துக்கொண்டே செல்கிறது. எட்டு வழிச்சாலைக்கு நிலம் வழங்குபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அரசு ஏற்கனவே உறுதி அளித்துள்ளது. மக்களுக்கு நல்ல திட்டமாக அமையவுள்ள இத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான் காரணம். எனக்கு அவர் உறுதுணையாக உள்ளார். துணை முதல்வரும், மற்ற அமைச்சர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரமே அழிந்து விட்டது. தென்னை மரங்கள், மாமரங்கள், தேக்கு, சவுக்கு, வெற்றிலைக்கொடி என அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனைக் காணும்போது மனம் வேதனை அடைகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அதே வேகத்தில் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
புயலால் 2.21 லட்சம் மின் கம்பங்கள் சாய்ந்து விட்டன. 26 ஆயிரம் ஊழியர்கள் மின் கம்பங்களை நடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உயிரை பணயம் வைத்து அவர்கள் பணியாற்றுகின்றனர். உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் 2400 பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறையினரும் களத்தில் இறங்கி மக்களுக்கு வேண்டிய நிவாரணப் பணிகளை செய்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சேலத்தில் நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். மின் தடை ஏற்படாமல் இருக்க, பூமிக்கடியில் மின் கேபிள்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேலம் மாநகரம் மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்சி வருகின்றன. அவர்களுக்கு சேலத்தின் வளர்ச்சியே பதிலாக அமையும்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ரோகிணி, எம்எல்ஏக்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், மாநகராட்சி ஆணையர் சதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.