புரட்டாசி மாதத்தில், பெருமாள் திருமலையில் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்ததை நினைவுகூர்ந்து சிறப்பு வழிபாடுகள் செய்து, மிக விசேஷமாக கொண்டாடுவது வழக்கம். இந்த மாதத்தில் பெருமாளுக்கு விரதம் இருந்து வேண்டினால் நினைத்த நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல் புரட்டாசி மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்துவது வழக்கம்.
கரோனா பரவலின் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத் தலங்களை மூடும்படி தமிழ்நாடு அரசு அறிவித்து நடைமுறையில் இருந்துவருகிறது. தற்போது புரட்டாசி சனிக்கிழமையான இன்று (18.09.2021), தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கோயிலின் வாசலில் நின்று பெருமாளுக்கு சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து, தரிசனம் செய்துவருகின்றனர்.
தமிழ்நாடு அரசு விரைவில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும், குறிப்பாக புரட்டாசி சனியன்று கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியளிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.