முழுநேர ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டதால், சென்னை நகர மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவையான காய்கறிகளை வாங்கும் பொருட்டு ஒரே மார்க்கெட் ஆன கோயம்பேடு சந்தையில் மதுரை சித்திரைத் திருவிழாக் கூட்டம் போன்று திரண்டுவிட்டார்கள். இதன் காரணமாக கரோனா தொற்று பரவலானதும், சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்பது அதிகாரிகள் அறிந்த விஷயம் தான்.
விளைவு அடுத்த இரண்டே வாரத்தில் வெடித்துவிட்டது. கோயம்பேடுத் தயாரிப்பால் சென்னையில் கரோனா தொற்று, வகை தொகையின்றி எகிறியது. இதனைச் சுட்டிக்காட்டிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மக்களைக் காப்பாற்ற விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கைவிடுத்தார்.
அடுத்து அரசு மே.7 அன்று மதுக்கடைகளைத் திறக்கப் போவதாக அறிவித்தது. மதுக்கடைகளைத் திறந்தால் கூட்டம் சேரும் கட்டுப்படுத்த முடியாது. கரோனா தொற்று விரைவுபடும். இத்தனை நாள் மக்களின் ஊரடங்கின் நோக்கமும் பயனற்று வீணாகிவிடும். மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். தி.மு.க. தலைவர் கடுமையாக எதிர்த்தார். அன்றைய தினம் கூட்டணி அரசியல் கட்சியினர், மக்கள் காலை 10 மணியளவில் தத்தமது வீட்டு முன்பு சாத்வீகமாக சமூகவிலகலைப் பின் பற்றிக் கொண்டு மதுக்கடை திறப்பிற்கெதிராக கோஷமிட வேண்டும் என்று அறிவித்தார்.
மே. 7 அன்று காலை நெல்லையின் பேட்டைப் பகுதியின் தன் வீட்டுத் தெருவில் கருப்பு பேட்ஜ் அணிந்து மதுக்கடைத் திறப்பிற்கெதிராக கோஷமிட்டார் தி.மு.க.வின் மாநகர மா.செ அப்துல் வகாப். பாளை. புதுப்பேட்டைத் தெருவில் பாபுராஜ் மற்றும் அங்குள்ள மக்கள், தூத்துக்குடியில் தனது வீட்டின் முன்னே திருச்செந்தூர் தி.மு.க. எம்.எல்.ஏ.வான அனிதா ராதா கிருஷ்ணன் உட்பட மதுக்கடைத் திறப்பை எதிர்த்து மத்திய மாநில அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டக் கோஷங்களை எழுப்பினர்.
மோடி அரசே, எடப்பாடி அரசே கரோனாவைத் தடுத்திடு. மதுக்கடைகளை மூடிடு மக்களைக் காப்பாற்று என்று முழக்கங்கள் கிளம்பின. அதேபோன்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வி.சி.கட்சியின் ந.செ.பாஷித் தலைமையில் வி.சி. கட்சியினர், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ம.தி.மு.க.வின் மா.செ. ராஜேந்திரன் ந.செ. ஆறுமுகச்சாமி, சி.பி.எம் அசோக் போன்றவர்கள் மற்றும் கட்சியினர் தொடர்ந்து சங்கரன்கோவிலின் 12, 13ம் வார்டு மக்களான குரு, பழனி, ராம், கிருஷ்ணம்மாள், மாரியம்மாள் என தெரு மக்களும் கோஷமிட்டனர். தென்காசியில் தி.மு.க. புள்ளிகளான ராமையா மற்றும் அய்யாத்துரைப் பாண்டியன் ஆகியோர் தங்களது வீடு முன்னே எதிர்ப்பைக்காட்டினர். எதிர்ப்புகள் வலுக்கின்றன. அதேசமயம் மதுக்கடைகள் திறப்பு அன்று பாட்டில்கள் வாங்கும் பொருட்டு மக்களின் நீண்ட வரிசையையும் காண முடிந்தது.
ஆனால் சாதாரண மக்கள் தொடங்கி மேல்தட்டு வரையிலான மக்கள் மத்தியில் கரோனா பற்றிய அச்சமும் பரவியிருப்பதையும் காணமுடிந்தது.