தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சாலையை செப்பனிட வலியுறுத்தி, கிராம மக்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம் நடத்தினார்கள். விளாத்திகுளம் அருகே உள்ள புதுப்பட்டி, என்.வேடபட்டி, அச்சங்குளம், வடமலாபுரம் கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், அவசர தேவைக்கும் அருகே உள்ள நாகலாபுரத்திற்கு தான் வரவேண்டும்.
ஆனால், நாகலாபுரத்திற்கு வரும் 10 கி.மீ. சாலை பல ஆண்டுகளாக செப்பனிடாத காரணத்தால் பல்லாங்குழிகளாக காட்சி அளிக்கிறது. சில இடங்களில் சாலை என்பதற்கே அடையாளமே இல்லை. அந்த அளவுக்கு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. இந்த பகுதியில் பேருந்து போக்குவரத்து கிடையாது என்பதால், இருசக்கர வாகனத்தில் செல்வதற்கு மட்டுமே இந்த சாலை பயன்படுகிறது.
அதிலும், பல இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால், இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் அச்சங்குளத்தை சேர்ந்த செவிலியர் விஜயலட்சுமி, நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிமுடித்துவிட்டு வீட்டிற்கு இரவு 9 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். கல் இடறி கீழே விழுந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.
குறிப்பாக இந்த சாலையில் மின்விளக்குகளும் கிடையாது என்பதால், 6 மணிக்கு பிறகு பெரும்பாலும் சாலையில் மக்கள் நடமாட்டம் இருக்காது. இதனால்தான், கீழே விழுந்த செவிலியரை, தூக்கிவிடக் கூட ஆட்கள் யாரும் இல்லாத பரிதாபநிலை. எனவே, இந்தசாலையை செப்பனிடுவதோடு, மின்விளக்குகள் பொருத்த வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சாலையில் மலர் வளையம் வைத்து ஒப்பாரி போராட்டமும் நடத்தி உள்ளனர்.