தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6- ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (09.01.2020) காலை வழக்கம் போல் பேரவை கூடியது. அப்போது மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த சட்டத்திருத்த மசோதாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தாக்கல் செய்தார். இதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை 6 மாதம் நீட்டிக்க வகை செய்யும் மசோதாவை பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து 2019- 2020 ஆம் ஆண்டுக்கான துணை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். அப்போது பேசிய துணை முதல்வர், "சென்னையில் குடிசையில் வசிப்போருக்கு படிப்படியாக மாற்று குடியிருப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் குடிசைகளில் 14,857 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் 10,740 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 10,740 குடும்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் சாலையோரம் வசிக்கும் 4,938 குடும்பங்களும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன." இவ்வாறு துணை முதல்வர் பேரவையில் கூறினார்.