தென்மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக பல்வேறு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இறங்கு முகத்தில் உள்ளது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் முழுமையாக கரோனா பாதிக்கப்பட்டோர் இல்லா மாவட்டமாக மாறியுள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். ஆயினும், தென்காசி மாவட்டத்தில் ஒருவாரமாகப் பாதிப்பு இல்லாத நிலையில், நேற்று புளியங்குடியில் இரண்டு பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை மாநகரில் கரோனா தொற்று மின்னல் வேகமெடுத்து பரவியும் வருகிறது. கோயம்பேடு பகுதியில் தொடர்பிலிருந்தவர்கள்தான் பாதிப்பில் அதிகம். அன்றாடம் பாதிக்கப்பட்டவர்களின் கிராஃப் ஏறிக்கொண்டே போகிறது. இதனால் மக்களிடையே அச்சம் பரவிய நிலையில், சென்னையிலிருக்கும் வெளிமாவட்டத்தினர் உயிர் பயம் காரணமாக தங்களின் சொந்த ஊருக்குக் கிடைத்த வாகனத்தில், அது டுவீலராகட்டும் எதையாவது பிடித்து திரும்பி வருகின்றனர்.
இந்தத் தகவல் காவல்துறைக்கு தெரியவர, போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். ஏனெனில் நோய் தொற்றுக் குறைந்துள்ள தென்மாவட்டங்களுக்கு அவர்கள் வரும்பட்சத்தில் அவர்களால் தொற்று ஏற்பட வாய்ப்பு என்பதால் அவர்களை வழியிலேயே மடக்குவதற்கு மாவட்டங்களின் எல்லையில் போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிர சோதனையிலிருக்கிறார்கள். இதனால் குறுக்கு வழிகளில் காட்டுப்பாதைகளின் மூலமாக வந்தடையலாம் என்பதால் அந்தப் பகுதிகளும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்துத் தென்மாவட்டங்களும் தங்களின் எல்லைப் பகுதிகளை மூடி சீல் வைத்துவிட்டன.
இதனிடையே நெல்லை மாநகர காவல் துணைக் கமிஷ்னரான சரவணன் மாநகரத்தின் அனைத்து நுழைவு வாயில்களையும் மூடி, கணிகாணிப்பை பலப்படுத்தியுள்ளார். உரிய காரணங்களுக்காக மாவட்டம் விட்டு, மாவட்டம் செல்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தருகிற இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி. மற்றவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
மேலும் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட லாரிகள் சரக்குடன் வரும்போது அவைகள் சோதனை சாவடியில் மடக்கப்பட்டு அதில் வருகிற லாரி டிரைவர்கள், கிளீனர்கள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கரோனா நெகட்டிவ் என்றால் அனுமதி, பாஸிட்டிவ் என்றால் டிரைவர்களை சிகிச்சைக்கு அனுப்புகிற ஏற்பாட்டையும் செய்திருக்கிறார். மேலும் வெளிமாநிலத்தவர், பிற மாவட்டத்தினர் குறுக்கு வழியில் வருவதை தடுத்துத் தெரிவிக்க கிராமங்களில் கண்காணிப்புக் குழுக்களையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார் துணைக் கமிஷ்னர் சரவணன்.
நாமும், நமது ஊரில், நமது நகரத்தில், இவ்வளவு நாட்கள் நம்மை தனிமைப்படுத்திக்கொண்டு இருந்தது வீணாகிவிடும். ஊரடங்கின் நோக்கம் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக காவல் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டு அனைத்துத் துறையினரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.