அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் உள்ளது கடாரம் கொண்டான் என்ற கிராமம். வரலாற்று சிறப்புமிக்க இந்த ஊரில் பல்வேறு தரப்பு மக்கள் வாழ்கிறார்கள். ஊர் மக்கள் மற்றும் இங்குள்ள ஆண்டவர் சாமியை குலதெய்வமாக எல்லை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக சிறுக சிறுக பக்தர்களின் உதவியுடன் பணம் சேர்த்து அந்த கோயில் சாமி சிலைகளையும், கோயிலையும் புனரமைப்பு செய்தனர். இறுதியில் நேற்று அந்த கோயிலில் முறைப்படி கும்பாபிஷேக நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிலையில் கரோனா பரவலை காரணம் காட்டி காவல்துறை கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என்று தடை விதித்தது.
ஆண்டவர் கோயிலை வழிபடும் மக்கள் தங்கள் கஷ்டப்பட்டு புனரமைப்பு செய்து கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்தில் தடை உத்தரவு போடப்பட்டது கண்டு ஆத்திரம் அடைந்தனர். இதையடுத்து அந்த கிராம மக்கள் மற்றும் ஆண்டவர் சாமியின் குல தெய்வமாக வழிபடும் பக்தர்கள் திரளாக கூடி திருச்சி -சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயில் கும்பாபிஷேக நடத்துவதற்கு அனுமதி தரவேண்டும் இல்லையேல் சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தனர். இந்த நிலையில் இந்தத் தகவல் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி கலை கதிரவன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குறிப்பிட்ட தேதியில் ஏற்கனவே முடிவு செய்தபடி ஆண்டவர் சாமிக்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அனுமதி அளித்தால் தான் சாலை மறியலை கைவிடுவோம் என்று அதிகாரிகளிடம் பிடிவாதமாக கூறினர். அதன் பிறகு போலீசார் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் அதிகாரிகள் பக்தர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் இறுதியில் இதுகுறித்து உடையார்பாளையம் கோட்டாட்சியரிடம் மனு அளித்து அவரது ஆலோசனையின்படி நடப்பதாக அதிகாரிகள் பொதுமக்கள் தரப்பில் பேசி முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கோட்டாட்சியர் அனுமதியுடன் ஆண்டவர் சாமிக்கு எப்படியும் கும்பாபிஷேகம் நடத்தி முடிப்பது என்பதில் கிராம மக்கள் உறுதியுடன் உள்ளனர். மத்திய அரசு உத்தரப் பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. அதேபோல் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் கும்பல் கூடுவது குறையவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகங்கள், திருவிழாக்கள், பள்ளிகல்விக்கூடங்களை மட்டும் திட்டமிட்டு மூடுவது ஏன்? தமிழக மக்களின் கலாச்சாரம் பண்பாடு போன்ற அடிப்படை விஷயங்களில் தடைபோட்டு தடுக்கப்படுவதால் அவை அழியும் நிலையை அரசுகளே ஏற்படுத்தலாமா?என்று வேதனை தெரிவிக்கிறார்கள் பொதுமக்கள்.