Skip to main content

தென்னகத்துக் காசியில் குவிந்த மக்கள்

Published on 17/07/2023 | Edited on 17/07/2023

 

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை என்பது தென்னாட்டின் காசி என்று அழைக்கப்படுகிறது. இங்கு காவிரி, பவானி, அமுத நதி என்ற மூன்று ஆறுகளும் இணைகிறது. அது ஒன்றாகக் காவிரி ஆற்றில் கலந்து செல்கிறது. இந்த இடம் கூடுதுறை என அழைக்கப்படுகிறது. இந்த பவானி கூடுதுறையில் தான் ஆடி 1, ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கூடுதுறையில் தங்கள் முன்னோர்களுக்குத் திதி மற்றும் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

 

ஒவ்வொரு ஆண்டும் பவானி கூடுதுறையில் மார்கழி அமாவாசை, தை அமாவாசை, ஆடி 1, ஆடி 18, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் மகாலிய அமாவாசை தினங்கள் சிறப்பு பெற்றவை. இங்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து காவிரி, பவானி, அமுதநதி என மூன்று நதிகள் சங்கமிக்கும் கூடுதுறையில் காவிரி ஆற்றின் கரையில் தங்கள் மூதாதையர்களுக்குத் திதி மற்றும் தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம் .

 

இந்த ஆண்டு ஆடி பிறப்பான முதல் தேதி மற்றும் ஆடி அமாவாசை இரண்டும் ஒரே நாளில் துவங்குவதால் பவானி கூடுதுறைக்கு பக்தர்கள் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். மேலும் தங்கள் மூதாதையர்களுக்கு எள், தர்பப் பில், பிண்டம் வைத்து திதி மற்றும் தர்ப்பணம் செய்தனர். இறந்து போன தங்களது குழந்தைகளுக்கு காதோலை, கருகமணி, காய்கறிகள், கீரைகள், புத்தாடைகள் ஆகியவற்றைப் படையலிட்டு பரிகார பூஜைகளும் செய்தனர். ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, தர்மபுரி, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வந்திருந்த பொதுமக்கள் பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் தர்ப்பணம் செய்து தங்கள் மூதாதையர்களை வழிபட்டுச் சென்றனர்.

 

இன்றைய ஆடி ஒன்று அமாவாசை என்பதால் புதுமணத் தம்பதியர் அதிக அளவில் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆடி முதல் நாள் அமாவாசை என்பதால் பெரும்பாலான பெண்கள் முளைப்பாரியை ஆற்றில் விட்டுத் தங்கள் தாலி சரடுகளை மாற்றிக் கட்டிக் கொண்டனர். பிறருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராட படித்துறையில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஆண்களுக்கானத் தனிப் பகுதியும் பெண்களுக்கானத் தனிப் பகுதியும் ஒதுக்கப்பட்டுத் தடுப்புகள் அமைக்கப்பட்டது. புனித நீராடிய பக்தர்கள் சங்கமேஸ்வரர் கோவிலுக்குச் சென்று  நீண்ட வரிசையில் நின்று வழிபட்டுச் சென்றனர். பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணி மேற்கொண்டனர். அதேபோல் பவானி தீயணைப்பு வீரர்கள் நீரில் யாரும் அடித்துச் செல்லக்கூடாது என்பதற்காக நீச்சல் வீரர்களுடன் படித்துறையில் இருந்தார்கள். நடமாடும் மருத்துவக் குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸுடன் தயாராக இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்