கடந்த ஆண்டு நவம்பர் 16ந் தேதி கஜா புயல் வலுவாக தாக்கியதில் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கோடிக்கணக்காண மரங்கள் அடியோடு சாய்த்தன. அதில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சில மரங்களே தப்பி நி்ன்றது.
அப்படி தப்பி நின்ற மரங்களையும் புயலில் சாய்ந்த மரங்களோடு சேர்த்து அடியோடு அறுத்துச் சென்றனர் ஒப்பந்தக்காரர்கள். "இப்படி புயலில் தப்பி உயிர் பிழைத்து நிழல் கொடுக்க ஆங்காங்கே சாலை ஓரங்களில் நிற்கும் மரங்களையும் ஆளுங்கட்சியினர் வெட்டி செல்கிறார்களே?" என்று சுற்றுப்பயணத்தில் இருந்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் புளிச்சங்காடு கைகாட்டியில் வைத்து நாம் கேள்வி எழுப்பியதும், உடனே உயிர்மரங்களை வெட்டி எடுப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுங்கள் என்று அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சொன்னதுடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை புகார் கொடுக்கவும் உத்தரவிட்டார்.
அதனால் அடுத்த சில நிமிடங்களில் மாவட்டம் முழுவதும் உயிர்மரங்களை வெட்டிதாக பலர் மீது வழக்கு பதிவானது. அமைச்சரின் இந்த செயலைப் பார்த்த பொதுமக்கள், மரங்களின் ஆர்வலர்கள் புயலில் தப்பிய மரங்கள் இனி பிழைத்துக் கொள்ளும் என்று நினைத்தனர்.
புயல் பாதித்து ஒரு வருடம் நினைவு தினம் முடிந்து 10 நாட்கள் கூட ஆகவில்லை, உயிர் மரங்களை வெட்டினால் வழக்கு போடச் சொன்ன அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதியில் உள்ள தினசரி அவர் வீட்டுக்குச் சென்று வரும் அன்னவாசல் கடைவீதியில் கடந்த 50 வருடங்களாக சாலை ஓரமாக நின்று பல லட்சம் பொதுமக்களுக்கு நிழல் கொடுத்த புளிய மரத்தை சாலைக்கு பாதி்ப்பாக உள்ளது என்று சிரு சில மணி நேரத்தில் வெட்டி எடுத்துவிட்டனர்.
மரத்தை வெட்டத் தொடங்கியதுமே அப்பகுதி பொதுமக்கள் மரத்தை வெட்ட வேண்டாம். பொதுமக்களுக்கு உதவியாக இருந்த மரம், போக்குவரத்துக்கும் பாதிப்பு இல்லாத உயிர் மரம் என்று பலரும் கெஞ்சினார்கள். அவர்களின் கெஞ்சல் மரம் வெட்டியவர்களின் காதுகளில் கேட்கவில்லை. வேகமாக வெட்டி அகற்றிவிட்டனர்.
அந்த மரத்தின் நிழலை அனுபவித்தவர்கள், மரத்தை வெட்டவேண்டாம் என்று கெஞ்சிய பொதுமக்கள், வெட்டி எடுக்கப்பட்ட மரத்தின் அடியில் மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சி சம்பவம் அங்கு நடந்தது.
இன்றும் பல சாலைகளில், மரங்கள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அச்சுறுத்திக் கொண்டு நிற்கிறது. ஏனோ அந்த மரங்களை வெட்டி அகற்ற மனமில்லை. உயிர் மரங்களை வெட்டி எடுக்கிறார்கள்.
மாணவர்களும், இளைஞர்களும், தன்னார்வ அமைப்பினலும் லட்ச லட்சமாக, மரக்கன்றுகளை நட்டு புயலில் இழந்ததை விட பல மடங்கு மரங்களை உருவாக்குவோம் என்று சொந்தக் காசில் மரக்கன்றுகளை நட்டு வரும் நிலையில் உயிர் மரத்தை வெட்டி அகற்றியது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.