சென்னையில் நேற்று (06.04.2021) ஒருசில வாக்குச்சாவடிகளில் மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர்களின் வசதிக்காக சக்கர நாற்காலிகள் வைக்கப்படவில்லை. அதில் குறிப்பாக பாடிக்குப்பம், நுங்கம்பாக்கம், நெல்சன் மாணிக்கம் சாலை, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வசதிக்காக சக்கர நாற்காலிகள் வைக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். அதனால் அவர்கள் உறவினர்கள், நண்பர்கள், அங்கு பணியில் இருந்த போலீசார் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகளின் உதவியோடு ஓட்டுப்பதிவு செய்தனர்.
சில தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு உதவி செய்ய முற்பட்டபோது, உரிய அனுமதியின்றி யாரையும் அனுமதிக்க முடியாது என கூறி அவர்களை திருப்பி அனுப்பினர். தேர்தல் ஆணையம் உரிய முன்னேற்பாடு செய்யவில்லை என குற்றச்சாட்டுகள் குவிகின்ற நிலையில், சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான சிறப்பு வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.