திருப்பத்துார் மாவட்டம், பொம்மிகுப்பம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாதனவலசை, பழத்தோட்டம், ஓம்சக்தி நகர் கூட்டுரோடு பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கே லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், கர்ப்பிணிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கின்றனர்.
இந்நிலையில் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிகின்றது. இதனால் விரக்தியடைந்த கிராம மக்கள் இப்படிக்கு ஊர் மக்கள் சார்பில், என குறிப்பிட்டு நோட்டீஸ் ஒன்று சுற்றுவட்டார கிராமங்களில் விநியோகம் செய்துள்ளனர் மேலும் பொம்மிக்குப்பம் பல்வேறு பகுதிகளில் நோட்டீஸ் அடித்து ஒட்டி உள்ளனர்.
அதில், இன்றைய காலகட்டத்தில் பல கர்ப்பிணிப் பெண்களின் கனவு சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்று கொள்வதுதான். இவர்களின் கனவை நனவாக்க அதிசய சாலை திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ளது. எத்தனையோ மருத்துவர்கள், மகப்பேறு காலத்தில் அறுவை சிகிச்சை செய்தால் தான் தாயும் சேயும் நலமாக இருப்பார்கள் என்று சொல்வது உண்டு. இதனால் மருத்துவ செலவை எண்ணி நினைக்கும் போதே கர்ப்பிணிப் பெண்கள் மனமுடைந்து விடுகின்றனர்.
அவர்களின் துயரத்தை போக்கத்தான் இங்கு அதிசய சாலை உள்ளது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் இந்த சாலையில் தற்செயலாக பயணம் செய்யும் போதே சுகப்பிரசவமாக குழந்தை பெற்று உள்ளனர் என அச்சடிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பு எனக்கூறி, அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவர்கள், பொம்மிகுப்பம் ஊராட்சி மன்றத்தின் முறையான அனுமதி பெற்ற பிறகே பயணம் செய்ய வேண்டும். மீறி கர்ப்பிணிப் பெண்கள் பயணம் செய்தால், நாங்கள் பொறுப்பல்ல என்பதை தங்களின் பணிவான கவனத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு வித்தியாசமாக தங்களது எதிர்ப்பினை அந்த கிராம மக்கள் வெளிக்காட்டியுள்ளது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.