பணி நிறைவுப் பெற்றாயிற்று.! விருந்து வைத்தால் சொந்த பந்தம் தான் சாப்பிட வருவாங்க..! அத்தோடு இது ஊரடங்கு காலம்..! நாம் வேலைப் பார்த்த இந்த மண்ணின் மக்களுக்கு ஏதாவது செய்தால் என்ன..? என்ற கேள்வியுடன் தன்னுடைய ஓய்வூதிய பலனில் பெற்ற தொகையில் 1000 மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை கொடுத்து அசத்தியிருக்கின்றார் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றிய ஒருவர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சிறப்பு நிலை முகவராக பணியாற்றி வந்தவர் முருகேசன். மின்வாரியத்தில் மொத்தம் 33 ஆண்டுகள் பணியாற்றி கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி பணியினை நிறைவு செய்திருக்கின்றார். பணியாற்றிய 33 ஆண்டுகளில் ஏறக்குறைய 29 ஆண்டுகள் தீவுப்பகுதியிலேயே பணியாற்றி வந்ததால், பணி நிறைவிற்கு பின் தான் வசிக்கும் ராமர்தீர்த்தம் பகுதியிலுள்ள அனைத்து மக்களையும் அழைத்துவிருந்து அளிப்பதாக திட்டமிடப்பட்டது. பணி ஓய்வுப்பெற்ற நிலையில் கரோனா தொற்றுக்காரணமாக ஊரடங்கும் அமலுக்கு வந்தது.
இந்த நிலையில்," தான் விருந்து வைத்தால் சொந்த பந்தம் தான் சாப்பிடும்.. ஊர்க்காரங்களுக்கு என்ன செய்வது..?" என்ற கேள்வியில், தன்னுடைய ஓய்வூதிய பலனில் வந்த ஒரு பகுதியில் நலிவடைந்த 1000 குடும்பங்களுக்கு தலா ரூ.600 மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைத் தொகுப்பினை வீடு தேடி சென்று வழங்கி வருகின்றார் முருகேசன். இவரின் செயலால் இவரைப் போல் பணி நிறைவெய்திய ஏனையோரும் உதவிக்கு முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.