தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த காய்ச்சல் பாதித்தவர்களுக்கு கை, கால் மூட்டுவலிகள், முகத்தில் ஆங்காங்கே கருப்பு தழும்புகள் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மேலும் காய்ச்சல் நோய் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், புதுக்கோட்டை கிளை சார்பில், கடந்த மாதம் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு தாலுகா, மற்றும் மருத்துவமனைகளில் சுமார் 44 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளது(இதில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இல்லை) என்று மருத்துவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அதாவது விராலி மலை தொகுதி இலுப்பூர் அரசு மருத்துவமனையில் 11 மருத்துவர்களுக்கு 2 மருத்துவர்கள் மட்டுமே உள்ள நிலையில் 9 மருத்துவர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 250 பேர் நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களை பரிசோதிக்கவே ஒரு நாள் ஆகிறது. இதே போல, மாவட்ட தலைமை மருத்துவமனையான அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை, அன்னவாசல், கீரனூர், கறம்பக்குடி எனக் கிராமப்புற மக்கள் அதிகம் பயன்படுத்தும் 13 மருத்துவமனைகளில் 44 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
மேலும், மருத்துவர்கள் பற்றாக்குறையால் தீவிர சிகிச்சைக்கு தங்க வைக்க முடியாமல் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல மருத்துவ உபகரணங்கள் உபயோகமின்றி முடங்கி கிடப்பதாக கூறப்படுகிறது.
இதே போல புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள் அதிகம் பயனடையக்கூடிய புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஒவ்வொரு நாளும் 50 பிரசவங்கள் வரை பார்க்கப்பட்டாலும் மிக முக்கியமான மருத்துவமனையான இங்கு பணியில் இருக்க வேண்டிய 26 மருத்துவர்களில் 6 மருத்துவர்கள் மட்டுமே உள்ளதால் சுமார் 20 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
பணியில் இருக்கும் மருத்துவர்கள் மிக அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க செல்லும் போது, மற்றொரு அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை கவனிக்க கால தாமதமாகிறது. ஏழைகள் மட்டுமே அதிகம் பயனடையும் இது போன்ற அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை என்பது ஏழைகளின் உயிரோடு விளையாடுவதற்கு சமமாக உள்ளது என வேதனையுடன் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.