“தேவர் ஐயா எதிர்ல சத்தம்லாம் போட்டுட்டு இருக்கக் கூடாது, ஒழுங்கா ஓடிப் போய்டு..” ஆர்.பி. உதயகுமாரை ஒருமையில் பேசும் வீடியோ காட்சிகள், சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் போராட்ட தியாகியும் பார்வர்டு ப்ளாக் (FORWARD BLOCK) கட்சியின் தலைவருமான முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் பகுதியில் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். அந்த நாளில் தென் மாவட்டங்களில் உள்ள தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவார்கள்.
இதனையடுத்து, முத்துராமலிங்கத் தேவரின் 115 வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழா பசும்பொன் பகுதியில் நடைபெறுகிறது. இந்த விழாவானது, அக்டோபர் 28ம் தேதியில் தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவர் ஜெயந்தியை ஒட்டி பசும்பொன் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தேவர் நினைவிடத்திற்கு செல்லமாட்டார் என அறிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓ. பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் தற்போது தேவர் ஜெயந்திக்கு எடப்பாடி பழனிசாமி செல்லாதது கட்சிக்கு நல்லதல்ல என சொந்தக் கட்சியினரே கூறி வருகின்றனர்.
இதனையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு தேவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். அந்த சமயத்தில் அங்கிருந்த சில அதிமுக தொண்டர்கள் “அண்ணன் ஆர்.பி உதயகுமார் வாழ்க, வருங்கால முதல்வர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி வாழ்க” என தேவர் நினைவிடத்திற்கு உள்ளேயே கோஷம் போடத் தொடங்கியுள்ளனர்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பசும்பொன் கிராம மக்கள் அங்கு வந்த ஆர்.பி உதயகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சிலர் ஆர்.பி. உதயகுமாரை கடுமையாகச் சாடியுள்ளனர். அப்போது, அதில் ஒருவர் பேசும்போது “யார்ரா அது எடப்பாடி வாழ்கனு கோஷம் போட்டது...நீங்கள் அமைச்சரா இருங்க, யாரா வேணாலும் இருங்க...இங்க வந்து சத்தம் எல்லாம் போட்டுட்டு இருக்கக் கூடாது. வந்தோமா...சாமி கும்பிட்டோமா...போனோமான்னு இருக்கனும்...ஒழுங்கா ஓடிப் போய்டுங்க...(அங்கு முன்னாள் அமைச்சரை ஒருமையில் பேசினார்கள். அதை நாம் மரியாதை நிமித்தத்திற்காக மாற்றியுள்ளோம்) என ஆர்.பி. உதயகுமாரை திட்டித் தீர்த்துள்ளார்கள். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிமுக நிர்வாகிகள், அவர்களை சமாதானப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. தேவர் ஜெயந்தி விழாவில் ஆர். பி. உதயகுமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வீடியோ காட்சிகள், சோசியல் மீடியாவில் வேகமாகப் பரவி வருகிறது.