ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். நாம் தமிழர் கட்சி கடந்த 20 ஆம் தேதி உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல், அதனை மீறி ஆலமரத் தெருவில் பரப்புரை மேற்கொண்டதாகத் தேர்தல் பறக்கும் படையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரைப் பெற்ற ஈரோடு தெற்கு காவல்துறையினர் 171F என்ற பிரிவின் கீழ் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு கொடுத்த நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர் மேனகா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''கடந்த 20 ஆம் தேதி திண்ணை பிரச்சாரம் செய்வதற்காக நான் போயிருந்தேன். அதற்கான அனுமதி வாங்கவில்லை என்று என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். ஏற்கனவே தேர்தல் ஆணையம் திண்ணை பிரச்சாரம் செய்வதற்கு வேட்பாளர்கள் அனுமதி வாங்க தேவையில்லை என வாய்மொழியாக சொல்லி இருந்தார்கள். அதனால் பரப்புரை செய்து கொண்டிருக்கிறோம். வரப்போகிற நாட்களில் எல்லா இடத்திலும் நான் பரப்புரை செய்து மக்களை சந்திப்பேன். அதற்கான அனுமதி வேண்டி நான் மனு கொடுத்துள்ளேன். என்னுடைய கேள்வி என்னவென்றால் திமுக எல்லா வார்டிலும் பிரச்சாரம் செய்கிறார்கள். மக்களை அடைத்து வைத்துள்ளார்கள். அவர்கள் எல்லாம் வாங்கிய அனுமதி கடிதத்தை எங்களிடம் காட்டுங்கள் என்று சொன்னால் எங்களிடம் அந்த அனுமதி கடிதம் இல்லை இரண்டு மணிக்கு மேல வாங்க காட்டுகிறேன் என்று சொல்கிறார்கள். இரண்டு மணிக்கு மேல் அனுமதி கடிதத்தை கொடுக்கிறேன் என்று சொன்னால் என்ன அர்த்தம் இதற்கு மேல் ரெடி பண்ணி கொடுக்கப் போகிறார்கள் என்று அர்த்தம்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு முக்கிய ஆதாரம். மக்களுக்கு எல்லா விதமான பரிசு பொருட்கள், பணம் எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது வெளிப்படையாகவே தெரிகிறது. இதன் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தார்கள். அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மையிலேயே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் இந்த கட்சி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு மக்களை சந்திக்க போன என் மீது ஏன் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மற்ற கட்சிகளைப் போன்று எங்களையும் நடத்துங்கள்'' என்றார்.