Skip to main content

"அவர்கள் மீது கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்"- தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி!

Published on 12/04/2022 | Edited on 12/04/2022

 

"Party disciplinary action will be taken against them" - Gold Tamilchelvan interview!

 

தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 19 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியது. இதற்கிடையே, அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவியைக் கட்சித் தலைமை காங்கிரஸுக்கு ஒதுக்கிய நிலையில், 10- வது வார்டில் போட்டியிட்ட ரேணுப்பிரியா பாலமுருகன், அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றினார். இதன் காரணமாக, ரேணுப்பிரியாவின் கணவரும், 20- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரும், தேனி நகரச் செயலாளருமான பாலமுருகனை கட்சியில் இருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டது.

 

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நகர்மன்றத் தலைவர் ரேணுப்பிரியா மற்றும் 29- வது வார்டு உறுப்பினர் சந்திரகலா பேசும் ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் பணம் பேரம் சம்பந்தமாக பேசியிருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தேனி தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

"Party disciplinary action will be taken against them" - Gold Tamilchelvan interview!

 

இக்கூட்டத்தில் 21- வது மற்றும் 23- வது வார்டு உறுப்பினர் மட்டும் கலந்துக் கொள்ளவில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாலமுருகன் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பிறகு தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசும் போது, "நகராட்சித் தலைவி ரேணு பிரியா மற்றும் தி.மு.க. கவுன்சிலர் சந்திரகலா, ஈஸ்வரி ஆகியோரின் ஆடியோ விவகாரத்தில், அவர்கள் பேசியது  போல் எந்த பணமும் மாவட்டச் செயலாளரான என்னிடம் கொடுக்கப்படவில்லை. அதை தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவியான ரேணுப்பிரியாவும் உறுதியளித்துள்ளார். ஆடியோவில் பேசிய சம்பந்தப்பட்ட தி.மு.க. கவுன்சிலர் மற்றும் நகராட்சி தலைவி ஆகியோர் தவறு செய்திருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

 

தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி தி.மு.க. சார்பில் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டது. அதில் தி.மு.க. கவுன்சிலர் நகராட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இன்னும் தலைமை கழகத்தின் பேச்சுவார்த்தைத் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த பேச்சுவார்த்தை முடியும் வரையில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க.உறுப்பினரான ரேணுப்பிரியாவே நகராட்சித் தலைவராக தொடர்வார். அவரது தலைமையிலே அடுத்த நகர்மன்றக் கூட்டம் நடைபெறும். ஆடியோ விவகாரம் மற்றும் தேனி அல்லி நகரம் நகராட்சி தலைவர் பதவி ஆகியவற்றில் கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக அனைத்து தி.மு.க. கவுன்சிலர்களும் உறுதி அளித்துள்ளனர்" என்றார். 

 

சார்ந்த செய்திகள்