50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள அரியலூர், நாமக்கல் ரயில்வே திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை பெரம்பலூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் பாரிவேந்தர் கேட்டுக் கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடியை இன்று (30/03/2022) நேரில் சந்தித்த பாரிவேந்தர் எம்.பி., நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றிப் பெற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்தார். மேலும், அவர் அளித்த மனுவில், தனது பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போதிய ரயில்வே வழித்தடங்கள் இல்லாததால், தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார். அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல் வரை 108 கி.மீ. தூரத்துக்கு ரயில்வே பாதை அமைப்பதற்கான கள ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், இதுவரை திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்தார். இத்திட்டம் தொடர்பாக, தமிழக முதலமைச்சருடன் கடந்த மார்ச் 6- ஆம் தேதி அன்று ஆலோசித்தபோது, அந்த ரயில்வே திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவு தெரிவித்தார். சுதந்திரமடைந்த இந்நாள் வரை பெரம்பலூர் பகுதியில் ரயில்வே வழித்தடம் இல்லாத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இதில் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.